2030க்குள் இந்தியாவில் 3.14 லட்சம் கோடி முதலீடு செய்கிறது அமேசான்
2030க்குள் இந்தியாவில் 3.14 லட்சம் கோடி முதலீடு செய்கிறது அமேசான்
ADDED : டிச 10, 2025 05:06 PM

புதுடில்லி: கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை தொடர்ந்து 2030ம் ஆண்டுக்குள் 3.14 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டிஜிட்டல் மயம், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை கவனத்தில் வைத்து முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டில்லியில் நடந்த அமேசான் நிறுவனத்தின் மாநாட்டில் அந்த நிறுவனத்தின் மூத்த துணை இயக்குநர் அமித் அகர்வால் பேசியதாவது: 2010 முதல் தற்போது வரை இந்தியாவில் அமேசான் நிறுவனம் 3.59 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அடுத்த 2030ம் ஆண்டுக்குள் அனைத்து வணிகங்களிலும் கூடுதலாக 3.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம்.
மேலும், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை முன்று மடங்கு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதனை காட்டிலும் 2 மடங்கு அதிகமாக அமேசான் முதலீடு செய்கிறது. மேலும், கூகுள் நிறுவனமும் ஆந்திராவில் தரவு மையம் அமைக்க 1.3 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனை காட்டிலும் அமேசான் நிறுவனத்தின் முதலீடு 2.3 மடங்கு அதிகம் ஆகும்.

