ரேஷன் கடை இல்லை என்ற விஜய்: பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த புதுச்சேரி
ரேஷன் கடை இல்லை என்ற விஜய்: பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த புதுச்சேரி
ADDED : டிச 10, 2025 05:02 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்றைய தினம் தமது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தவெக தலைவர் நடிகர் விஜய், புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை என்று பேசினார். ஆனால் இன்றோ புதுச்சேரி அரசு ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்து இருக்கிறது.
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டார். நேற்றைய தினம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 13 நிமிடங்கள் மட்டுமே அவர் உரையாடினார். தமது பேச்சில், ரேஷன் கடைகளே இல்லாத ஒரு மாநிலம் புதுச்சேரிதான் என்றார்.
விஜய்யின் பேச்சை புதுச்சேரி அரசு மறுத்துவிட்டது. அவர் கூறுவது பொய்யான தகவல், ரேஷன் கடைகள் மூலமாகத்தான் பயனாளிகளுக்கு பொருட்கள் தரப்படுகின்றன என்றும் விளக்கம் அளித்தது.
இந் நிலையில், இன்று ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி ரூ.750 மதிப்புள்ள பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பில், பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை இருக்கும்.
பரிசு தொகுப்பு ஜன.3 முதல் பயனாளிகளான அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் அட்டைதாரர்களை தவிர்த்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு தரப்பட உள்ளது.
கடந்தாண்டு புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதற்கான தொகையாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

