ராகுல் ஒரு வெளிநாடு வாழ் இந்திய அரசியல்வாதி; பாஜ விமர்சனம்
ராகுல் ஒரு வெளிநாடு வாழ் இந்திய அரசியல்வாதி; பாஜ விமர்சனம்
ADDED : டிச 10, 2025 04:47 PM

புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஒரு வெளிநாடு வாழ் இந்திய அரசியல்வாதி என்று பாஜ இளைஞரணி தலைவரும், எம்பியுமான தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் டிச.19ம் தேதி வரை நடக்கிறது. கூட்டத்தொடர் இன்னமும் நிறைவு பெறாத சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் டிச.15ம் தேதி ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு காங்கிரசின் அயலக அணி தலைவர்களை ராகுல் சந்திக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
பார்லிமெண்ட் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அதில் கலந்து கொள்ளாமல் வெளிநாடு செல்லலாமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந் நிலையில், அவரின் பயணத்தை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. அவர் ஒரு வெளிநாடு வாழ் இந்திய அரசியல்வாதி என்று பாஜ இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
பார்லி.வளாகத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
பார்லி. கூட்டத்தொடர் நடக்கும் போது, முதல் முறை எம்.பி. கூட அனுமதியின்றி வெளியே செல்ல முடியாது. ஆனால் எதிர்க்கட்சியின் தலைவர் கூட்டத்தொடரின் நடுவே வெளிநாடு செல்கிறார். ஆனால் இந்தியாவை பற்றி பேசுகிறார்.
நாட்டிலேயே இருப்பதை விட வெளிநாட்டில் அதிக நேரம் செலவிடும் ஒரு தலைவர், இந்தியர்களுக்காகப் பேசுவது போல் நடிக்க முடியாது. இந்தியாவில் உண்மையில் இங்கு வசிக்கும், தேசியப் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட, பொறுப்புடன் செயலாற்றும் ஒரு தலைவர் வேண்டுமே தவிர அதை பகுதி நேரப் பணியாக செய்பவர் அல்ல.
ராகுல் ஒரு வெளிநாடு வாழ் இந்திய அரசியல்வாதி. அவரது இதயம் வெளிநாட்டில் உள்ளது, ஆனால் கட்டாயத்தின் காரணமாக, அவர் இங்கு அரசியல் செய்கிறார்.
ஒரு எம்.பி.க்கு கூட பார்லி. கூட்டத்தொடரின் போது விடுப்பு எடுக்க முடியாது. ஆனால் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தொடரின் நடுவில் அவர் வெளிநாடு செல்வது அவரது தீவிரத்தையே காட்டுகிறது.
அடுத்த பதவிக்காலத்தில், காங்கிரஸ் நாட்டிற்கு மிகவும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு தேஜஸ்வி சூர்யா விமர்சித்தார்.

