கர்நாடகா, மஹாராஷ்டிராவுக்கு ரூ.1,950 கோடி வெள்ள நிவாரணத்துக்கு அமித் ஷா ஒப்புதல்
கர்நாடகா, மஹாராஷ்டிராவுக்கு ரூ.1,950 கோடி வெள்ள நிவாரணத்துக்கு அமித் ஷா ஒப்புதல்
ADDED : அக் 21, 2025 07:13 AM

புதுடில்லி: கர்நாடகா, மஹாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக, 1,950.80 கோடி ரூபாயை இரண்டாவது தவணையாக அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் துவங்கி செப்டம்பர் வரை தீவிரமாக பெய்தது. இதில், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கடும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக இரு மாநிலங்களுக்கும் 1950.80 கோடி ரூபாயை இரண்டாவது தவணையாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மழை, நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு, மத்திய அரசு மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இரண்டாவது தவணையை விடுவிக்க அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி கர்நாடகாவுக்கு 384.40 கோடி ரூபாயும், மஹாராஷ்டிராவுக்கு 1,566.40 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 27 மாநிலங்களுக்கு, 13,603.20 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 15 மாநிலங்களுக்கு, 2,189.28 கோடி ரூபாயும் மத்திய அரசு ஏற்கனவே விடுவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.