தேர்தலில் போட்டியிடும் வயதை 25ல் இருந்து 21 ஆக குறைக்க தெலுங்கானா தீவிரம்
தேர்தலில் போட்டியிடும் வயதை 25ல் இருந்து 21 ஆக குறைக்க தெலுங்கானா தீவிரம்
ADDED : அக் 21, 2025 07:12 AM

ஹைதராபாத்: “சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை, 25ல் இருந்து, 21- ஆக குறைக்க, அரசியலமைப்பை திருத்தும்படி மத்திய அரசை வலியுறுத்தி, தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்,” என, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் ஹைதராபாதில் நடந்த கட்சி விழாவில் பங்கேற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்துக்கு, ராஜிவ் காந்தி சத்பாவன விருதை வழங்கி கவுரவித்தார்.
விழாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜிவ், ஓட்டளிப்பதற்கான குறைந்தபட்ச வயதை, 21-ல் இருந்து, 18- ஆக குறைத்தது, நாட்டின் பார்லிமென்ட் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உதவியது. நாட்டில், 21 வயதான ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வெற்றிகரமாகப் பணியாற்றி வரும்போது, ஏன் ஒருவரால், 21 வயதில் எம்.எல்.ஏ.,வாக இருக்க முடியாது?
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை, 25ல் இருந்து 21- ஆக குறைக்க, அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தி தெலுங்கானா சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். நாட்டை வழிநடத்தும் வாய்ப்பு இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.