பீஹார் மக்களுக்கு 4 முறை தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு; அமித் ஷா
பீஹார் மக்களுக்கு 4 முறை தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு; அமித் ஷா
UPDATED : அக் 17, 2025 03:49 PM
ADDED : அக் 17, 2025 03:45 PM

பாட்னா: நவ.14ம் தேதி தேர்தல் முடிவையும் சேர்த்து பீஹார் மக்கள் இம்முறை 4 தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பை பெற்று இருக்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
சரணில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது;
சரண் பகுதியில் தொடங்கும் தேர்தல் பிரசாரம் எப்போதுமே வெற்றியில் தான் நிறைவடையும். பீஹார் இளைய தலைமுறையினருக்கு லாலு, ராப்ரி காட்டு ராஜ்ஜியத்தையும், அதை எதிர்க்கும் வகையில் உறுதிமொழி எடுக்கவும் சாப்ரா, சரண் போன்ற சிறந்த இடம் எதுவுமே இல்லை.
பீஹார் மக்களுக்கு இம்முறை 4 தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. ஒன்று ராமர் அயோத்தி திரும்பியதை குறிப்பது. இரண்டாவது தீபாவளி மகளிர் வங்கி கணக்கில் ரூ.10.000 டெபாசிட் செய்யும் திட்டம், மூன்றாவது ஜிஎஸ்டி வரிவிகிதம் குறைக்கப்பட்டது, நான்காவது தீபாவளி நவ.14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும் நாளில் கொண்டாடப்படும்.
மிக பெரும்பான்மையுடன் இம்முறை பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் பட்டியலை பார்த்தேன். அதில் சஹாபுதினின் மகன் பெயர் உள்ளது. அவரது மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் பீஹார் பாதுகாப்பாக இருக்க முடியுமா?
காஷ்மீர் நம்முடையதா? இல்லையா? என்று சொல்லுங்கள், ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்டிருக்க வேண்டுமா? இல்லையா? 370வது சட்ட பிரிவை நீக்கி, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரை தேசிய நீரோட்டத்துடன் இணைத்தார். காங். ஆட்சியில் பயங்கரவாதிகள் ரத்தத்துடன் ஹோலி கொண்டாடுவார்கள். பிரதமர் மோடி, ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் அவர்களை அழித்தார்.
இவ்வாறு அமித் ஷா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.