தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அமித் ஷா மகிழ்ச்சி!

அமித் ஷா மகிழ்ச்சி!

அமித் ஷா மகிழ்ச்சி!


ADDED : ஆக 22, 2026 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த வாரம் சென்னை வந்து தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்றார், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா. டில்லி திரும்பியதும் பிரதமர் மோடிக்கு போன் போட்டு, 'கூட்டம் நல்ல முறையில் நடந்தது. தென் மாநில முதல்வர்கள் அனைவரும் பாராட்டினர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா இடையே உள்ள முக்கிய பிரச்னையே, நதி நீர் பங்கீடு தான். இதனால், இதற்கான ஒரு திட்டத்தை அவர்களிடம் அளித்தேன். அனைவரும் அதை வரவேற்றனர்' என, மகிழ்ச்சியுடன் கூறினாராம்.

இந்த நதி நீர் பிரச்னைக்கு நதிகள் இணைப்பு தான் தீர்வு. இது தொடர்பான வரைவு அறிக்கையை, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தயாரித்திருந்தார். இதைத் தான் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா முதல்வர்களிடம் கொடுத்தாராம் அமித் ஷா. அவர் சென்னை வருவதற்கு முன்பாக, தமிழக முதல்வர் விஜய்க்கு தமிழக எம்.பி., வாயிலாக ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். அவர் விஜயை சந்தித்து, அமித் ஷா கூறிய செய்தியை தெரிவித்துள்ளார்.

இதன் விளைவு, விஜய்க்கு தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முக்கிய பங்கு அளிக்கப்பட்டது. அத்துடன், உலக வங்கியிடம் நிதி உதவி பெற்று, தென் மாநில நதிகளை இணைக்க திட்டம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர முதல்வர்களிடம் இது குறித்து பேசி விட்டாராம் அமித் ஷா.

இந்த கூட்டம் நடந்து முடிந்த பின், அமித் ஷா துாதுவராக அனுப்பிய தமிழக எம்.பி.,யும் குஷியானாராம். நீர்வளத் துறை அமைச்சர் பாட்டீல், மோடிக்கும், அமித் ஷாவுக்கும் மிகவும் நெருக்கமானவர். குஜராத் பா.ஜ., தலைவராக இருந்தவர். மோடி, அமித் ஷா, பாட்டீல் என மூன்று குஜராத்திகளும் ஒன்று சேர்ந்து, தென் மாநில நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டால் நல்லது தான்.

***

பிரச்னையாகும் புத்தகம்!

கடந்தாண்டு திடீரென, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார் ஜக்தீப் தன்கர். உடல்நிலையால் ராஜினாமா என அவர் கூறினாலும், அதை ஏற்க யாரும் தயாராக இல்லை. மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே, அவர் பதவி விலகினார் என, பேசப்பட்டது.

ஜக்தீப் தன்கர் ஒரு மூத்த வழக்கறிஞர். இவர் இப்போது மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல ஆரம்பித்து விட்டார். சில முக்கிய வழக்குகளில் ஆஜராகப் போகிறார். சமீபத்தில், உச்ச நீதிமன்ற வக்கீல்கள் சங்க தேர்தல் நடந்தது. அதில் ஓட்டளிக்க உச்ச நீதிமன்றம் சென்றார் தன்கர்.

எதற்கு திடீரென உச்ச நீதிமன்றம் வந்தார் தன்கர்? இவருக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர் ஒருவர், காங்கிரசைச் சேர்ந்தவர். 'நீங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு வந்து வாதாட வேண்டும்' என, அவர் கேட்டுக் கொண்டதால் தான் நீதிமன்றத்திற்கு வந்தாராம்.

இவருக்கு உச்ச நீதிமன்றத்தில் பல வக்கீல்கள் நண்பர்களாக உள்ளனர். அவர்களுடன் மூன்று மணி நேரம் உச்ச நீதிமன்றத்தில் செலவிட்டுள்ளார். அப்போது, துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதற்கான காரணங்களை, தனக்கு நெருக்கமான வக்கீல்களிடம் தெரிவித்தாராம் தன்கர். இந்த விஷயம் அனைத்தும், தன் சுயசரிதை புத்தகத்தில் இடம் பெறும் என்றும் தெரிவித்தாராம். இந்த புத்தகம் பா.ஜ.,விற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

***

சோனியாவின் சுயசரிதை

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், தன்னை பற்றி அதிகம் வெளியே சொல்லாதவர், காங்., மூத்த தலைவர் சோனியா. 79 வயதாகும் அவர், தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். இந்த சுயசரிதை, நவ., 10ல் வெளியாகிறது. 500 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை, பிரபல அமெரிக்க பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகத்தின் பெயர், 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' இது ஆடியோ புத்தகமாகவும் வெளியாகிறது.

ராஜிவை சந்தித்தது, அவருடன் ஏற்பட்ட காதல், மாமியார் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டது, ஸ்ரீபெரும்புதுாரில் புலிகளால் ராஜிவ் கொலை செய்யப்பட்டது, அதற்கு பின் அரசியலில் தான் எதிர்கொண்ட பிரச்னைகள் என, பலவற்றையும் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளாராம் சோனியா.

'தமிழகம் குறித்தும் இதில் அதிக குறிப்புகள் உள்ளதாம். ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபோது, சம்பவ இடத்தில் இருந்தவர், காங்., தலைவர் மரகதம் சந்திரசேகர். இவர், சோனியாவிற்கு போன் செய்து என்ன கூறினார் போன்ற விபரங்கள் இந்த புத்தகத்தில் இருக்கும்' என்கின்றனர் காங்., மூத்த தலைவர்கள்.

வெளிநாடுகளில் இந்த புத்தகம் அதிகமாக விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தகத்தின் வாயிலாக கிடைக்கும் பணம், பிரியங்காவிற்கு செல்ல வேண்டும் என, சோனியா சொல்லி விட்டாராம்.

'இந்த புத்தகத்தை படித்தால் நிச்சயம் சோனியா மீது மட்டுமன்றி, காங்., மீதும் பரிவு உண்டாகும். காங்கிரசை விட்டு விலகிச் சென்ற வாக்காளர்கள், மீண்டும் காங்கிரசுக்கு திரும்புவர். 2027ல் உ.பி., உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அந்த தேர்தல்களில் இந்த புத்தகம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, காங்., மீண்டும் வெற்றி பெற வாய்ப்பை உண்டாக்கும்' என, காங்., மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

வரும், 2029 லோக்சபா தேர்தலில் காங்., நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; ராகுல் தான் பிரதமர் என, காங்கிரஸ்காரர்கள் சத்தியம் செய்யாத குறையாக சொல்கின்றனர். அதற்கு சோனியாவின் சுயசரிதை ஒரு அடித்தளம் என, காங்கிரசுக்குள் பேச்சு அடிபடுகிறது.

***

எம்.பி., ஆகிறார் ஸ்மிருதி?

காங்கிரசின் கோட்டை என கருதப்பட்ட உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், 2019 லோக்சபா தேர்தலில், அக்கட்சியைச் சேர்ந்த ராகுலை, 55,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். ஆனால், 2026ல் அமேதி தொகுதியில் வேறொரு காங்., வேட்பாளரிடம் தோற்றுப்போனார். அதன்பின், இவர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்; முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், ஸ்மிருதிக்கு தேசிய பொதுச்செயலர் பதவி வழங்கியுள்ளார். மொத்தமுள்ள எட்டு தேசிய செயலர்களில் ஸ்மிருதி மட்டுமே பெண். அடுத்தாண்டில் பிப்ரவரியில், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த பொறுப்புகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, கூடுதலாக ஸ்மிருதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பரில், உ.பி.,யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, 10 ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓய்வு பெறுகின்றனர். இந்த பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். இதில், பா.ஜ.,விற்கு எட்டு எம்.பி.,க்களும், சமாஜ்வாதி கட்சிக்கு இரு எம்.பி.,க்களும் கிடைக்கும். ஸ்மிருதியை ராஜ்யசபா எம்.பி.,யாக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.

அடுத்த லோக்சபா தேர்தலில், இவரை களம் இறக்க கட்சி முடிவெடுத்து உள்ளதாம். அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் ஸ்மிருதி போட்டியிடுவார் என, சொல்லப்படுகிறது. 'இத்தனை நாள் யாருமே கண்டுகொள்ளாத இவருக்கு, ஏன் திடீரென கட்சி பாசம் காட்டுகிறது?' என, கட்சிக்குள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

***

கார்கே வருத்தம்!

காங்., தேசிய தலைவர் கர்நாடகாவைச் சேர்ந்த, பட்டியலின தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. சமீபத்தில் இவர், உத்தரகண்டின் ஹல்த்வானி நகரில், ராம்லீலா மைதானத்தில் நடந்த காங்., பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டம் நடந்த இரு நாட்களுக்கு பின், இதே மைதானத்தில் நடந்த ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள், இந்த ராம்லீலா மைதானத்தில் ஹோமம் நடத்தி, கோமியம் தெளித்து சுத்தப்படுத்தினர். கார்கே பட்டியிலனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த சுத்தம் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 'இதற்கும், பா.ஜ.,விற்கும் எந்த தொடர்பும் இல்லை' என, அக்கட்சி சொல்லி விட்டது. ஆனால், 'காங்., தலைவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை' என, கார்கே வருத்தப்பட்டாராம்.

டில்லியில் காங்., செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. 'இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், ஹல்த்வானி விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை. இது என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது' என, வருத்தப்பட்டு பேசினாராம் கார்கே.

குறிப்பாக, அடிக்கடி ஊடகங்களை சந்தித்து பேசும் இருவர் இச்சம்பவத்தை பற்றி பேசவே இல்லை என, மனமுடைந்து போனாராம் கார்கே. இவர்கள் ஜெய்ராம் ரமேஷா அல்லது சசி தரூரா என, கட்சிக்குள் விவாதமே நடக்கிறது.

கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us