என் காரை தாக்க அமித்ஷா உத்தரவு அரவிந்த் கெஜ்ரிவால் காமெடி
என் காரை தாக்க அமித்ஷா உத்தரவு அரவிந்த் கெஜ்ரிவால் காமெடி
ADDED : ஜன 23, 2025 09:38 PM
மடிப்பூர்:உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சியினர் என் காரைத் தாக்குவதற்கு காவல்துறை அனுமதித்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.
மேற்கு டில்லியின் ஹரி நகர், ரஜவுரி கார்டன், மடிப்பூர் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டு பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.
ஹரி நகரில் பொதுமக்களிடம் உரையாற்றிய பின்னர், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
இன்று ஹரி நகரில், எதிர்க்கட்சி வேட்பாளரின் ஆட்களை என் பொதுக் கூட்டத்திற்குள் நுழைவதை போலீசார் அனுமதித்தனர். அவர்கள், என் காரை தாக்கினர். இவை அனைத்தும் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் நடக்கிறது. டில்லி காவல்துறையை பா.ஜ.,வின் தனிப்பட்ட படையாக அமித் ஷா மாற்றியுள்ளார்
ஒரு தேசிய கட்சியின் தேசியத் தலைவரும் அதன் தலைவர்களும் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். மேலும் தேர்தல் ஆணையத்தால் எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்விகள் எழுப்பப்படும்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.,விடமிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இல்லை. குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

