பொதுமக்கள் பார்வைக்காக 'அம்ரித் உதயன்' 16ல் திறப்பு
பொதுமக்கள் பார்வைக்காக 'அம்ரித் உதயன்' 16ல் திறப்பு
ADDED : ஆக 03, 2025 02:24 AM

புதுடில்லி:ஜனாதிபதி மாளிகையில், 'அம்ரித் உதயன்' மலர் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக, 16ம் தேதி திறக்கப்படுகிறது. செப்டம்பர் 14ம் தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற, 'அம்ரித் உதயன்' மலர் தோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட, 16ம் தேதி திறக்கப் படுகிறது.
செப்டம்பர் 14ம் தேதி வரை தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மலர் தோட்டம் திறந்திருக்கும். கடைசியாக, மாலை 5:15 மணிக்கு உள்ளே செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவர்.
அதேநேரத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை பராமரிப்பு பணி நடப்பதால், அன்று மட்டும் அனுமதி கிடையாது.
மலர் தோட்ட வளாகத்தில், பால் வாடிகா, மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்டத் தோட்டம் ஆகியவை அமைந்து உள்ளன.
அனைத்து இடங்களிலும், மலர் மற்றும் தாவரத்தை பற்றி அறிந்து கொள்ள, கியூ.ஆர். குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதை, 'ஸ்கேன்' செய்து தாவரம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். அருவிகள், சிற்பங்கள், குளம் மற்றும் நீரோடை ஆகியவையும் அமைந்துள்ளது. வடக்கு அவென்யூ சாலையில் நுழைவாயில் எண் 35 வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், visit.rashtrapatibhavan.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.
மொபைல் போன், பர்ஸ், கைப்பை, தண்ணீர் பாட்டில், குழந்தைக்கான பால் பாட்டில் மற்றும் குடை ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. இவற்றைத் தவிர, வேறு எந்த பொருட்களும் அனுமதி இல்லை .
ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தின நாளில் விளையாட்டு வீரர்களுக்கும், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் களுக்கும் சிறப்பு அனுமதி வழங்கப்படும்.