தமிழகத்தில் யானைகள் வழித்தட விபரங்களை நீங்க அறிவிக்கிறீங்களா; நாங்க அறிவிக்கட்டுமா?: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
தமிழகத்தில் யானைகள் வழித்தட விபரங்களை நீங்க அறிவிக்கிறீங்களா; நாங்க அறிவிக்கட்டுமா?: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : டிச 13, 2025 12:36 AM

சென்னை: 'தமிழகத்தில் கண்டறியப்பட்ட யானை வழித்தடங்களை பிப்ரவரி மாதத்திற்குள் அறிவிக்காவிட்டால், நீதிமன்றமே அறிவிக்கும்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து, அவற்றை பாதுகாப்பது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் வாதாடியதாவது:
ஒருங்கிணைந்த யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து, அது பற்றிய விபரங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுக்கள், ஓசூர், தர்ம புரி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிகளில் நேரடி ஆய்வை முடித்து விட்டன.
மழை காரணமாக, ஒரு சில பகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கால அட்டவணையின்படி, ஒவ்வொரு படி நிலையில் உள்ள பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ராவின் அறிக்கையை தாக்கல் செய்தார். இதை படித்த பின், நீதிபதிகள் கூறியதாவது:
கடந்த விசாரணையின்போது, தமிழக அரசு தாக்கல் செய்த கால அட்டவணையின்படி, யானைகள் வழித்தடங்கள் அறிவிப்புக்கான பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக கூற முடியவில்லை.
அட்டவணையின்படி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு இருக்க வேண்டும் . ஆனால், அதற் கான பணிகள் துவக்கப்படவில்லை. இதை பார்க்கும்போது, கால அட்டவணையை கடைப்பிடிக்கவில்லை என தெரிகிறது.
எனவே, அடுத்தாண்டு பிப்ரவரியில் யானைகளின் வழித்தடங்களை அரசு அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால், குழு அறிக்கையின்படி, யானைகள் வழித்தடங்களை நீதிமன்றமே அறிவிக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

