UPDATED : பிப் 14, 2024 05:04 PM
ADDED : பிப் 14, 2024 04:47 PM

துபாய்: உலகம் முழுவதும் எழும் பிரச்னைகளை சமாளிக்க, வெளிப்படையான, நேர்மையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அரசுகளே இன்றைய தேவை என பிரதமர் மோடி கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, துபாயில் நடந்த உலக அரசுகள் மாநாட்டில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: இப்போது உலகிற்கு ஒரு ஸ்மார்ட் அரசு தேவை. அந்த அரசானது, தொழில்நுட்பம் மூலம், நிர்வாகத்தை வெளிப்படையானதாக மாற்ற வேண்டுமே தவிர ஊழல் நிறைந்ததாக மாற்றக்கூடாது. கொள்கை மற்றும் தீர்மானம் கொண்ட தலைவராக ஐக்கிய அரசு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் உள்ளார்.
ஒரு புறம் உலகம் நவீனத்துவத்தை ஏற்றுக் கொள்கிறது. மறுபுறம் கடந்த நூற்றாண்டில் இருந்து எழும் சவால்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உணவு பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, கல்வி என ஒவ்வொரு அரசும் அதன் குடிமக்களுக்காக பல பொறுப்புகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எனது அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
சமூக மற்றும் நிதி சூழலை வலிமைப்படுத்துவது முக்கியம். இந்திய மக்கள் எங்கள் அரசை நம்புகிறார்கள். ‛குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி' என்பதே எங்களின் நோக்கம். பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் மனித குலத்திற்கு சவால்களை வைத்து வருகிறது. பருவநிலை மாற்ற சவால்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

