'லோக்சபாவில் ஒலித்த பாரதியின் பாடல்: தமிழகத்துக்கு பெருமை': பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி பேட்டி
'லோக்சபாவில் ஒலித்த பாரதியின் பாடல்: தமிழகத்துக்கு பெருமை': பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி பேட்டி
UPDATED : டிச 11, 2025 06:24 AM
ADDED : டிச 11, 2025 04:28 AM

திருப்பூர்: 'வந்தே மாதரம்' பாடலை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் பாரதியார். லோக்சபாவில் பிரதமர் மோடி அவர் குறித்து புகழ்ந்து பேசியது, தமிழகத்திற்கு பெருமை'' என, பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி பெருமிதத்துடன் கூறினார்.
'வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்ட, 150வது ஆண்டு நிறைவை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இரு நாள் முன், பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திர போராட்டத்தின் போது, வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரை புகழ்ந்து பேசினார்.
பாரதியாரின், 143வது பிறந்த நாளான இன்று, அவரது எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி, நம்மிடம் பகிர்ந்தவை: 'வந்தே மாதரம்' பாடலுக்கும், பாரதியாருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. அதனால் தான், பிரதமர் மோடி, அவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
கடந்த, 1905ம் ஆண்டில், வங்க மண்ணில் தான் சுதேசிய இயக்கம் உருவானது; அதற்கு ஆதரவாக அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்ட மந்திர வாசகம் தான் வந்தே மாதரம்.
நம் நாட்டை தாயை போன்று மதிக்க வேண்டும்; வணங்க வேண்டும் என்பதே அதன் பொருள். வந்தே மாதரம் பாடலை, தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் பாரதியார். 'வந்தே மாதரம்' பாடலை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் பாரதியார் என, அறிஞர்கள் கூறுகின்றனர்.
முதல் முறை மொழி பெயர்த்த போது, அவருக்கு திருப்தி ஏற்படாததால், இரண்டாவது முறை மொழி பெயர்த்தார். 'வந்தே மாதரம்' என்ற தலைப்பில் நுால்களையும் எழுதியுள்ளார். இந்த தேசத்தை தெய்வமாக வணங்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்தினார்.
அதனால் தான் தனது பாடல்களில், பாரதத்தாய், பாரத அன்னை, சுதந்திர தேவி, பாரத மாதா என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தினார். பாரதியின் நண்பர் சுப்ரமணிய சிவா கூட, பாரத மாதாவுக்கு கோவில் எழுப்ப வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார்.
பாரதியார் புதுச்சேரியில் இருந்த போது, கை, கால்களில் விலங்கிடப்படாத நிலையில் சுதந்திர தேவியாக பாரதி அன்னை காட்சியளிக்கும் வகையில் சிலை செய்ய வேண்டும் என, அங்கிருந்த சிற்பிகளிடம் யோசனை கூறியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியம். 'வந்தே மாதரம்' பாடலை தேசிய ஒருமைப்பாடுக்குரிய பாடலாக பாரதி மாற்றினார்.
அந்த வார்த்தையை மையப்படுத்தி, 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஜாதி, மதம் பாரோம்' என்பது போன்ற வரிகளை தனது பாடல்களில் இடம் பெறச் செய்தார். தமிழகத்தை சேர்ந்த பாரதியார், வ.உ.சி. குறித்து லோக்சபாவில், பிரதமர் மோடி பேசியதன் வாயிலாக, அவ்விருவரின் புகழ் உலகெங்கும் பரவ வாய்ப்பு கூடியிருக்கிறது. இது, தமிழகத்திற்கு பெருமைமிக்க ஓர் அடையாளம்.
'உலகிற்கே தலைமையேற்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் விதமாக, 'வையத் தலைமைகொள்' என பாரதி பாடினார். அதற்கேற்ப, இந்தியா, பொருளாதாரத்தில் ஆற்றல் நிறைந்த நாடாக மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. உலகத் தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது. இவ்வாறு, நிரஞ்சன் பாரதி கூறினார்.

