ADDED : டிச 11, 2025 03:57 AM

சென்னை: 'நடிகர் கார்த்தி நடிப்பில், நாளை வெளியாக இருந்த, வா வாத்தியார் படத்தை, தியேட்டர் மற்றும் ஓ.டி.டி., தளங்களில் வெளியிட அனுமதி இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கடந்த 2019ல் தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம், 10.35 கோடி ரூபாய் கடன் பெற்றார்.
தொழில் அதிபர் திவாலானவர் என, நீதிமன்றம் அறிவித்தது. பின், அவர் இறந்ததால், சொத்துக்களை நிர்வகிக்க, சொத்தாட்சியர் நியமிக்கப்பட்டார்.
தொழிலதிபரிடம் கடன் பெற்றவர்கள், சொத்தாட்சியரிடம் கடன் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், 'கடன் தொகை 18 சதவீத வட்டியுடன் சேர்த்து, 21 கோடியே 78.50 லட்சம் ரூபாயை, ஞானவேல்ராஜா செலுத்த வேண்டும்.
இந்த கடன் தொகையை செலுத்தும் வரை, ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான, வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானவேல் ராஜா தரப்பில், 'படத்தை வெளியிடாவிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும்.
முதலில் 3.75 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்த தயாராக உள்ளோம்.
மீதித் தொகையை செலுத்தும் வரை, கோத்தகிரியில் உள்ள தன் நண்பரின் ௬ ஏக்கர் நிலம் தொடர்பான சொத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்' என, தெரிவிக்கப் பட்டது.
அதற்கு உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில், 'கடன் தொகையை செலுத்தாமல் இதுவரை ஏழு படங்களை வெளியிட நீதிமன்றம் வாயிலாக அனுமதி பெற்று உள்ளார்.
'கடன் தொகையை முழுமையாகவும் செலுத்தவில்லை. படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது' என தெரிவிக்கப் பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'ஞானவேல் ராஜா, நீதிமன்ற உத்தரவுப்படி கடன் தொகை செலுத்தாமல், நேர்மையற்ற முறையில் செயல்பட்டு உள்ளார் என்பதால், கடனை செலுத்தும் வரை, வா வாத்தியார் திரைப்படத்தை, தியேட்டர், ஒ.டி.டி., என, எந்த வடிவிலும் வெளியிட அனுமதிக்க முடியாது' எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

