தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய பொதுச்செயலருக்கு முழு அதிகாரம்! அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய பொதுச்செயலருக்கு முழு அதிகாரம்! அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
ADDED : டிச 11, 2025 03:57 AM
சென்னை: சட்டசபை தேர்தலில், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்ய, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து, நேற்று நடந்த அக்கட்சி பொதுக்குழு கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தமிழகத்தில் நடந்து வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், சென்னை அடுத்த வானகரத்தில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, அ.தி.மு.க., தலைமை தாங்குகிறது. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு, பொதுக்குழு வழங்குகிறது
கோவை மற்றும் மதுரையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, போதிய புள்ளி விபரங்களோடு அனுப்பாத தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்
சேலம், கோவை, மதுரை மாநகரங்களில், 'பாஸ்போர்ட்' அலு வலகம் அமைக்க வேண்டும்
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, அ.தி.மு.க., வரவேற்கிறது. முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லுமுல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்
தி.மு.க., அரசு, நெல்லின் ஈரப்பததத்தை, 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு ஆணையை பெற்று, நெல் கொள்முதலை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வேண்டும்
தஞ்சை தரணிக்கு துரோகம் இழைத்து, 'தானும் டெல்டாக் காரன்' என தம்பட்டம் அடித்து, வேருக்கு வெந்நீரையும், விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து ஸ்டாலின் தருவது கண்டிக்கத்தக்கது
ஒவ்வொரு ஆண்டும், வட கிழக்கு பருவ மழையின்போது, தொடர் மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற் படுகிறபோது, மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்து வரும் தி.மு.க., அரசு, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, குறைந்தபட்சம் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம் காரணமாக, முதலீடுகள் குறைகின்றன. தொழில் நிறுவனங்கள் இடம் பெயர்கின்றன. ஆனால், தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு புள்ளி விபரங்களை அள்ளி வீசும் முதல்வரையும், தொழில் துறை அமைச்சரையும் பொதுக்குழு கண்டிக்கிறது. இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முயல வேண்டாம்
தமிழகத்தில் சிறுமியர், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை, பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருப்பது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும். காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம்
தமிழகத்தின் நிதி நிலைமை படு பாதாளத்தில் உள்ளது. கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களை தொடர்ந்து கடனாளியாக்கும் தி.மு.க., பெயிலியர் மாடல் அரசுக்கு கண்டனம்
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது.
அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றிவிட்டு, 'நீட்' தேர்வு, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, அனைத்து தரப்பு மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க., அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் கண்டனம்
முதல்வர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் என துவங்கி, மதுரை மேயர் ராஜினாமா என்கிற அளவுக்கு, ஊழல் சாம்ராஜ்யமாக திகழும் தி.மு.க., அரசுக்கு கண்டனம்
நீதித்துறை சுயமாக செயல்பட, அதன் தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது. ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும். நீதித்துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை, பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
வரும் 2026 சட்டசபை தேர்த லில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமியை முதல்வராக்க சூளுரைப்போம் என்பது உட்பட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

