ஒரு இட்லி ரூ.70, பூரி செட் ரூ.120 மூணாறில் ஓட்டல்களில் 'கொள்ளை'
ஒரு இட்லி ரூ.70, பூரி செட் ரூ.120 மூணாறில் ஓட்டல்களில் 'கொள்ளை'
ADDED : நவ 30, 2024 02:38 AM

மூணாறு:மூணாறில் சாதாரண ஓட்டல்களில் கூட தாறுமாறாக விலை வைத்து விற்பதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மூணாறில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் விதத்தில் ஓட்டல், தங்கும் விடுதிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலை பாலம் அருகில் உள்ள சாதாரண ஓட்டலில் நட்சத்திர ஓட்டல் போன்று பூரி செட் ரூ.120, இட்லி ரூ.70, காபி ரூ.30, உப்புமா ரூ.80, சாப்பாடு ரூ.250 என வசூலிக்கின்றனர்.
அந்த ஓட்டல் பில் வலைதளங்களில் பரவி கண்டனங்களை சந்தித்து வருகிறது. தங்கும் விடுதிகளிலும் வரைமுறையின்றி கட்டணம் வசூலிக்கின்றனர். சீசன் காலங்களில் சிறிய அறைக்கு கூட ஆடம்பர அறைகளை மிஞ்சும் அளவில் ரூ.ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
காரணம் என்ன
மூணாறில் சீசனில் மட்டுமே வருமானம் கிடைக்கும். இதனால் பெரும்பாலான ஓட்டல், பேக்கரிகளை அவற்றின் உரிமையாளர்கள் நாள் வாடகைக்கு விடுகின்றனர். சீசன் இல்லா நேரங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட சீசனில் விலையை உயர்த்திவிடுகின்றனர். இது சுற்றுலா பயணிகளிடம் விரக்தியை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. எனவே ஓட்டல், விடுதிகளுக்கு விலையை நிர்ணயித்து வெளிப்படையாக காட்சிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் சுற்றுலா நலிவடைவதை தவிர்க்க இயலாது.