அனில் அம்பானி மீதான பண மோசடி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க ஈ.டி.,க்கு உத்தரவு
அனில் அம்பானி மீதான பண மோசடி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க ஈ.டி.,க்கு உத்தரவு
ADDED : பிப் 05, 2026 12:21 AM

- டில்லி சிறப்பு நிருபர் -:
தொழிலதிபர் அனில் அம்பானியின், 'அனில் திருபாய் அம்பானி குழுமம்' மற்றும் அவர் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான, 40,000 கோடி ரூபாய் பண மோசடி வழக்கை விரைந்து விசாரிக்க, மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கும்படி, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில் அம்பானி, 66.
இவர், 2017- - 19- வரையிலான காலத்தில், 'யெஸ்' வங்கியிடம், 2,965 கோடி ரூபாய் கடன் வாங்கினார். இதை சட்ட விரோதமாக மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்தார். பின், இந்தத் தொகை வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.
முறைகேடு
விசாரணையில், அனில் அம்பானி குழுமத்திற்கு, யெஸ் வங்கி 11,000 கோடி ரூபாய் கடன் அளித்தும், அதை அவர் முறைகேடாக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
இதுபோல, தனக்கு சொந்தமான, 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராடெல், ரிலையன்ஸ் டெலிகாம்' ஆகிய நிறுவனங்களுக்காக வாங்கிய கடன்களை, சட்ட விரோதமாக அனில் அம்பானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம், 40,185 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்துள்ளார். இந்த விவகாரத்தில், 8,997 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் அமலாக்கத் துறை, சி.பி.ஐ., ஆகிய இரு அமைப்புகளுமே ஏற்கனவே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளன.
எனவே இரு விசாரணை அமைப்புகளும் விரைந்து செயல்படும் என, நம்புகிறோம். அனில் அம்பானி குழுமத்துக்கு எதிரான விசாரணையை விரைந்து முடிக்க, மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமலாக்கத் துறை அமைக்க வேண்டும்.
இந்த வழக்கில் விரிவாக விசாரணை நடத்தி, அடுத்த நான்கு வாரங்களுக்குள் அமலாக்கத் துறை - சி.பி.ஐ., அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
நோட்டீஸ்
சி.பி.ஐ.,-யின் விசாரணை நடைமுறை வியப்பாக இருக்கிறது. எஸ்.பி.ஐ., வங்கி அளித்த புகாரின்படி, 2025-ல் ஒரேயொரு முதல் தகவலறிக்கை மட்டுமே சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது. பிற நிதி நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த போதும் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு வங்கியின் புகாரும் தனித்தனி புகாராக கருத வேண்டும்.
அதற்குத் தனித்தனியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில், வங்கி அதிகாரிகளின் தொடர்பு குறித்தும் சி.பி.ஐ., விசாரணையை விரிவுபடுத்த வேண்டும்.
இது தொடர்பாக, அனில் அம்பானி மற்றும் அவரது குழுமம் நான்கு வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

