அங்கித் திவாரி வழக்கு: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அங்கித் திவாரி வழக்கு: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜன 25, 2024 02:50 PM

புதுடில்லி: அங்கி திவாரி தொடர்புடைய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை சார்பில், தொடரப்பட்ட மனு மீது 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு டிச.1ம் தேதி கைது செய்தனர். திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அங்கித் திவாரி வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள், ‛‛ இரு தரப்பும் பிரச்னையை சுமூகமாக தீர்க்க முயற்சிக்கவில்லை என்றால் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்க நேரும்.
காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் கைது நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது, அவ்வாறு இருப்பின் அதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது''. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
பின்னர், 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.