ADDED : டிச 26, 2024 06:32 AM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின், மிக முக்கிய திட்டமான 'அன்னபாக்யா' திட்டம் குறித்து, திரைப்படம் தயாராகவுள்ளது.
கடந்த 2013ல், காங்கிரஸ் அரசில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா, 'அன்னபாக்யா' திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் பி.பி.எல்., குடும்பத்தினருக்கு ஐந்து கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது. இத்திட்டம் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியது; அவரது செல்வாக்கும் அதிகரித்தது.
இரண்டாம் முறையாக பதவியேற்ற பின், இந்த திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்கும் 'அன்னபாக்யா' திட்டத்தை செயல்படுத்தினார். பயனாளிகளுக்கு ஐந்து கிலோ அரிசியும், ஐந்து கிலோ அரிசிக்கான பணமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை மையமாக கொண்டு, திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஹரிஷ், தயாரிக்கிறார். வரும் பிப்ரவரி 2ம் தேதி, படப்பிடிப்பு துவங்கவுள்ளது. அன்றைய தினம் படப்பிடிப்பை துவக்கிவைக்கும்படி, தயாரிப்பாளர் ஹரிஷும், ரேஷன் பொருட்கள் வினியோகிப்பாளர்கள் சங்கத்தின் தேசிய தலைவர் கிருஷ்ணப்பாவும், முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

