பசி, பஞ்சத்தை போக்கும் ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி பசி பஞ்சத்தை போக்கும் ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி
பசி, பஞ்சத்தை போக்கும் ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி பசி பஞ்சத்தை போக்கும் ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி
ADDED : பிப் 04, 2025 06:45 AM

சிக்கமகளூரு கலசா தாலுகா, ஹொரநாடு கிராமத்தில் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி தேவி கோவில் உள்ளது. இக்கோவில் எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்தது என, வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகே உள்ள பத்ரா நதிக்கரையில் அமைந்து உள்ளது.
இந்த கோவிலில் மூலவராக, பார்வதி தேவியின் மற்றொரு அவதாரமான ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி தேவி உள்ளார். தேவியின் சிலை முழுதும் தங்கத்தால் செய்யப்பட்டு உள்ளது.
பிரதான நுழைவு வாயிலில் அன்னபூர்ணேஸ்வரியின் பல சிற்பங்கள், லட்சுமி, பார்வதி போன்ற ஹிந்து கடவுள்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஹிந்து மத நம்பிக்கைப்படி அன்னபூர்ணேஸ்வரி தேவி, 'உணவு வழங்கும் தெய்வம்' என அழைக்கப்படுகிறார். இதனாலே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு டீ, காபி மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது.
இக்கோவிலுக்கு வந்து ஒரு முறை வழிபட்டால், வாழ்க்கையில் பசி பஞ்சம் வராது என்பது பக்தர்களின் ஐதீகம்.
மேலும் ஹிந்துக்கள் மட்டுமின்றி மாற்று மதத்தினரும் தேவியை வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி, அட்சய திருதியை நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அருகில் உள்ள நீர்வீழ்ச்சிகள், காடுகள் ஆகியவற்றை பார்த்து ஆனந்தம் அடையலாம். காலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
தேவியை வழிபடுவதற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை சிறந்த மாதங்களாக உள்ளன. ஆண்கள் மேல் சட்டை இல்லாமலும், பெண்கள் பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிந்து வர அனுமதி உள்ளது. தேவியை வழிபடுவதற்கு இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். - நமது நிருபர்- -