ADDED : ஏப் 25, 2025 05:30 AM

திருவனந்தபுரம் : 'நடிகை வின்சி அலோஷியசிடம் நடந்து கொண்டது போலவே, நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதையில் என்னிடமும் அத்துமீறினார்' என, மலையாள நடிகை அபர்ணா ஜோன்ஸ் கூறியுள்ளார்.
போதை பொருள் பயன்படுத்தும் கேரள நடிகர் ஷனை் டாம் சாக்கோ, தன்னிடம் அத்துமீறியதாக, நடிகை வின்சி அலோஷியஸ் புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், சாக்கோவிடம் விசாரிக்க, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற போது, ஜன்னல் வழியாக தாவி, குதித்து அவர் தப்பினார்.
பின்னர், போலீசில் சரணடைந்த சாக்கோவிற்கு, ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகை அபர்ணா ஜோன்ஸ் என்பவரும் ஷைன் டாம் சாக்கோ மீது புகார் கூறியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், 'சூத்திர வாக்கியம் என்ற மலையாள படத்தில் நானும் நடித்தேன். அப்போது, ஷைன் டாம் சாக்கோ போதை பொருள் பயன்படுத்தியதை பார்த்தேன். அவர் வாயிலிருந்து வெள்ளை நிறத்தில் பொடியை துப்புவார். போதை மயக்கத்தில், நடிகை வின்சி அலோஷியசிடம் நடந்து கொண்டதைப் போலவே என்னிடமும் அவர் அத்துமீறினார்.
'உடனடியாக நான், அந்த படத்தின் புகார் கமிட்டியிடம் கூறினேன். தற்போது நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். இந்தியா வர வேண்டியது இருக்கும் என்பதால், இதுவரை போலீசில் புகார் கொடுக்கவில்லை' என, கூறியுள்ளார்.