மேலும் ஒரு இதய நோய் நிபுணர் மரணம்: தொடரும் மாரடைப்பு மரணங்களால் மருத்துவத்துறையினர் அதிர்ச்சி
மேலும் ஒரு இதய நோய் நிபுணர் மரணம்: தொடரும் மாரடைப்பு மரணங்களால் மருத்துவத்துறையினர் அதிர்ச்சி
ADDED : ஆக 31, 2025 07:58 PM

புதுச்சேரி: சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலங்களில் மாரடைப்பால் இறக்கும் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த, 39 வயது இதய நோய் சிறப்பு மருத்துவர் கிராட்லின் ராய், இதய நோயாளிக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாரடைப்பால் மருத்துவர்கள் உயிரிழப்பது அதிகரிப்பது குறித்தும், அதில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும், மருத்துவர்களிடையே விவாதமே எழுந்தது.
இந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 42 வயதே ஆன இதய நோய் நிபுணர் தேவன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே வாரத்தில் இதய நோய் நிபுணர்கள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.