உள்நாட்டில் தயாரான செமிகண்டக்டர் தகடை வெளியிட்டார் மத்திய அமைச்சர்
உள்நாட்டில் தயாரான செமிகண்டக்டர் தகடை வெளியிட்டார் மத்திய அமைச்சர்
ADDED : அக் 19, 2025 12:29 AM

புதுடில்லி: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட, 'செமிகண்டக்டர்' எனப்படும் மின்னணு சிப்பின் கையளவு தகடை வெளியிட்டார்.
கடந்த 2021 டிசம்பரில் மத்திய அரசு, இந்திய செமிகண்டக்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக, 76,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மொத்த முதலீடு இந்த திட்டத்திற்கு பின், நாட்டின் செமிகண்டக்டர் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
மத்திய அரசு இதுவரை ஆறு மாநிலங்களில், 10 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களுக்கான மொத்த முதலீடு 1.6 லட்சம் கோடி ரூபாய்.
பிரிட்டனின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான ஏ.ஆர்.எம்., அதன் பெங்களூரு ஆலையில் செமிகண்டக்டர் உருவாக்கும் பணியை துவங்கியுள்ளது. 2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் 'மேட் இன் இந்தியா' சிப் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறைக்கு ஏற்ப, 85,000 இன்ஜினியர்களுக்கு பயிற்சி தரும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நம் நாட்டின் சிப் உற்பத்தி குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
இந்தியாவின் வளர்ச்சி இன்று, 'டிஜிட்டல்' புரட்சியால் வழி நடத்தப்படுகிறது. டிஜிட்டல் கடன் வசதி, அதிவேக மொபைல் டேட்டா மற்றும் எல்.எல்.எம்., எனப்படும் பெரிய மொழி மாதிரிகள் ஆகியவை தொழில்நுட்ப மாற்றத்துக்கான முக்கிய காரணிகள்.
புதிய மாற்றம் நம் நாட்டிடம் தற்போது இரண்டு நானோமீட்டர் அளவிலான மிகச்சிறிய சிப்களை வடிவமைக்கும் திறன் உள்ளது. இது, உலக சந்தையில் புதிய மாற்றத்தை உருவாக்கும். செமிகண்டக்டர் துறையில் நம் நாடு விரைவில் முன்னணி நாடாக உருவாகும்.
உலகளவில் சிப் வடிவமைப்பு இன்ஜினியர்களில், 20 சதவீதம் பேர் இந்தியர்கள். அது, நமக்கு மிகப்பெரிய வலிமையாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.