42 சதவீத இடஒதுக்கீடு தடையை எதிர்த்து தெலுங்கானாவில் பந்த்
42 சதவீத இடஒதுக்கீடு தடையை எதிர்த்து தெலுங்கானாவில் பந்த்
ADDED : அக் 19, 2025 12:25 AM

ஹைதராபாத்: தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் பிற் படுத்தப்பட்டோருக்கு, 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மாநில அரசின் உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் பிற்படுத்தப்பட்டோர் சமூக கூட்டு நடவடிக்கை குழு நேற்று பந்த் நடத்தியது.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னதாக, ஆட்சிக்கு வந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்திருந்தது. இதற்கான அரசாணையை செப்., 26ல் முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டார். இந்த இடஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதித்து, கடந்த 9ம் தேதி தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அக்., 18ல் பந்த் நடத்த பிற்படுத்தப்பட்டோர் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு ஆளும் காங்., மற்றும் பா.ஜ., பாரத் ராஷ்ட்ர சமிதி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதையொட்டி நேற்று பல்வேறு கட்சியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பினர் தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக ப ஸ் டிப்போக்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் பஸ்கள் இயக்கப்படாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் பாதிக்கப்படவில்லை. ஹைதரபாதின் ஜூப்ளி ஹில்ஸ் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., லோக்சபா எம்.பி., எட்டலா ராஜேந்தர் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கானா ஜகுர்தி அமைப்பின் நிறுவனர் கல்வகுண்ட்ல கவிதா கூறுகையில், ''பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் அல்லது பா.ஜ., கட்சிகள் நிறுத்த வேண்டும். முதலில் பிற்படுத்தப்பட்டோருக்கு, 42 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்த பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்,'' என்றார்.