பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு
பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு
UPDATED : மே 10, 2025 06:27 PM
ADDED : மே 10, 2025 04:37 PM

புதுடில்லி: ''இனி வரும் காலங்களில் இந்தியா மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் போராகவே கருதப்படும்,'' என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மத்திய அரசு உறுதி அளித்தது. இதன்படி, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடவடிக்கை துவக்கிய இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
போர் நிறுத்தம்
இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, 'வருங்காலத்தில் இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் அனைத்தும் போராகவே கருதப்பட்டு, அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும்' என அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.