அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
ADDED : மார் 14, 2024 11:17 PM

புதுடில்லி:கிழக்கு டில்லியின் கீதா காலனியில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
கீதா காலனியின் அருகே உள்ள சாஸ்திரி நகரில் ஒரு நான்கு அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று அதிகாலை 5:00 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காலை 5:22 மணி அளவில் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசாரும் 9 தீயணைப்புப் படையினரும் விரைந்து சென்றனர். 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட 9 பேரை மீட்டனர்.
இவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
தரை தளமான பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் தீப்பிடித்து, மற்ற வாகனங்களுக்கும் பரவியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அங்கிருந்து கட்டடம் முழுதும் தீ பரவியிருக்கிறது. மின்கசிவு காரணமாக காரில் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் விசாரணைக்குப் பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரிய வரும்.
தீ விபத்தால் எழுந்த புகை காரணமாக கட்டடத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

