ADDED : ஜூலை 08, 2025 09:43 PM
புதுடில்லி:கரோல் பாக் விஷால் மெகா மார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனமான, 'குடும்ப்' சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:
கரோல்பாக் விஷால் மெகா மார்ட்டில் கடந்த, 4ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் அரசு நிர்வாகம், மாநகரப் போலீஸ், தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி ஆகியவை அலட்சியமாக இருக்கின்றன.
பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் நெரிசலான பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் மற்றும் தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.