பெமலில் 119 பேர் நியமனம் கன்னட வளர்ச்சி குழுமம் கேள்வி
பெமலில் 119 பேர் நியமனம் கன்னட வளர்ச்சி குழுமம் கேள்வி
ADDED : பிப் 03, 2024 11:14 PM
தங்கவயல்: தங்கவயல் பெமல் தொழிற்சாலைக்கு 119 பணியாளர்கள் ஆன்லைன் மூலம் நியமனம் செய்யப்பட்டு உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கச் சுரங்கம் என்றாவது மூடிவிட நேரிடலாம். தங்கவயல் தங்கச்சுரங்க தொழிலாளர் குடும்பங்களின் மறுவாழ்வுக்காகவே 1964ல் பெமல் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், தங்கச்சுரங்க தொழிலாளர் குடும்பத்தினர் 10 சதவீதம் கூட இல்லை.
பெமலில் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இங்கு தற்காலிக பணியாளர்களாக 30 ஆண்டுகள் சர்வீஸ் செய்தும், பணி நிரந்தரம் ஆகாமல் ஓய்வு பெறுகின்றனர்.
இவர்களுக்கு எந்த ஒரு சலுகையும் வழங்கப்படவில்லை. நிரந்தர பணியாளர்களை விட தற்காலிக பணியாளர்கள் தான் அதிகமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலையில் குரூப் சி மற்றும் டி பிரிவில் 119 பணியாளர்கள் ஆன்லைன் மூலம் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலும் மும்பை, டில்லி, கோல்கட்டா, உத்தரப்பிரதேசம், பீஹார் மாநிலத்தவருக்கு தான் அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது.
உள்ளூர்காரர்கள், கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லையென புகார் எழுந்து உள்ளது. இதனால், கர்நாடக கன்னட வளர்ச்சி குழுமத்திற்கு தங்கவயல் கன்னட அமைப்பினர் புகார் செய்துள்ளனர்.
இதன் பேரில் பெமல் நிறுவனத்துக்கு பணியாளர் நியமனம் குறித்த விபரங்கள், தேர்வு பட்டியல், கன்னடர் எத்தனை பேருக்கு வாய்ப்பு என்ற விபரங்களை அளிக்குமாறு கன்னட வளர்ச்சி குழும செயலர் கடிதம் அனுப்பி உள்ளனர்.