தகவல் கமிஷனர்கள் நியமனம்: பிரதமருடன் ராகுல் ஆலோசனை
தகவல் கமிஷனர்கள் நியமனம்: பிரதமருடன் ராகுல் ஆலோசனை
ADDED : டிச 10, 2025 10:33 PM

புதுடில்லி: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராகுலை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இன்று( டிச.,10) மதியம் சந்தித்தார். 88 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது,மத்திய அரசின் தலைமை தகவல் கமிஷனர் மற்றும்8 தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ராகுல் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
சட்ட விதிமுறைகளின்படி தலைமை தகவல் கமிஷனர், தகவல் கமிஷனர்கள் மற்றும் லஞ்சஒழிப்புதுறை தலைவரை பிரதமர், அவர் நியமிக்கும் மத்திய அமைச்சர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும்.
இதன்படி இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். மதியம் ராகுல் வந்ததும், 1:07 மணிக்கு கூட்டம் துவங்கியது.
இந்த கூட்டத்தில் தற்போது காலியாக உள்ள மத்திய அரசின் தலைமை தகவல் கமிஷனர், எட்டு தகவல் கமிஷனர்கள் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய கமிஷனர் பதவிகளை நிரப்புவது குறித்து மூவரும் ஆலோசனை நடத்தினர்.
88 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில், சிலரது பெயர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும், அதற்கு ராகுல் எழுத்துப்பூர்வமாக தனது எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோன்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வது வழக்கம் என்றும், முன்பும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்ற கார்கே அல்லது ராகுல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ஹிராலால் சமாரியா கடந்த செப்.,13ம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பிறகு, இந்தப்பதவி காலியாக உள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டப்பிரிவு 12(3) ன் கீழ் தலைமை தகவல் கமிஷனர் மற்றும் தகவல் கமிஷனர்கள் பிரதமர் தலைமையிலான குழுவால் நியமனம் செய்யப்படுகின்றனர். தற்போது 10 தகவல் கமிஷனர்களில் தற்போது, ஆனந்தி ராமலிங்கம் மற்றும் வினோத் குமார் திவாரி ஆகியோர் மற்றுமே பணியாற்றி வருகின்றனர். எஞ்சிய 8 பதவி காலியாக உள்ளது.
தகவல் அறியும் உரிமை தொடர்பான புகார்கள் இவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் 30,838 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

