பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவோம்; ஜெய்சங்கர் உறுதி
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவோம்; ஜெய்சங்கர் உறுதி
ADDED : டிச 10, 2025 10:22 PM

புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கு, இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள இத்தாலியின் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானி டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
பின்னர் ஜெய்சங்கர் கூறியதாவது: கடந்த மாதம் புதுடில்லியில் நடந்த பயங்கரவாத சம்பவத்தின் போது இத்தாலி அரசிடம் இருந்து, இந்தியாவிற்கு ஆதரவளித்ததற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளும் உறவை வலுப்படுத்துவதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
இத்தாலி இந்தியாவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்று. பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கு, இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 மாநாட்டில் இருநாட்டு பிரதமர்கள் சந்தித்தபோது, பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான கூட்டு முயற்சியை நாங்கள் அறிவித்தோம். அது மிகவும் நேர்மறையான நடவடிக்கையாகும். நாங்கள் இத்தாலியுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
இந்தியா-இத்தாலி உறவுகளில் வளர்ந்து வருகிறது. நீங்கள் அடிக்கடி இங்கு வருவது எங்களுக்கு மிகவும் வரவேற்கத்தக்கது. இது மிகவும் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. நல்ல உறவுக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

