தமிழகத்திற்கு புது டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
தமிழகத்திற்கு புது டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
ADDED : பிப் 12, 2026 06:04 PM

புதுடில்லி: தமிழகத்தின் அடுத்த டிஜிபி நியமனத்துக்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு ஒரு வாரத்தில் அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக டிஜிபி ஆக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வை தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கிஷோர் கிருஷ்ணசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 'பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அரசின் தவறு. புது டிஜிபி நியமனம் செய்ய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசுக்கு கடைபிடிக்கவில்லை' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு சார்பில், 'டிஜிபி பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.யுபிஎஸ்சியில் சில குழப்பம் நிலவுகிறது. டிஜிபி இல்லாததால், தேர்வுக்குழுவில் கூடுதல் உள்துறை செயலாளரை இணைக்க வேண்டும் என கோரியிருந்தோம். இதற்கு யுபிஎஸ்சி ஏற்கவில்லை. டிஜிபி தேர்வு செய்பவர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என நிபந்தனை சேர்க்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,' தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமை செயலாளர். மற்றொருவர், டிஜிபி இல்லாதபட்சத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர் குழுவில் இடம் பெற வேண்டும். டிஜிபி தேர்வு செய்யப்படுபவர், சட்டம் ஒழுங்கு, உள்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்ற விதியை தமிழகத்துக்கு தளர்த்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கான பெயர்களை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயரை பரிசீலனை செய்து 2 வாரங்களுக்குள் யுபிஎஸ்சி தேர்வு செய்து புதிய டிஜிபி பெயரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

