கட்டட கலைக்கு எடுத்துக்காட்டு அரலுகுப்பே சென்னகேசவா கோவில்
கட்டட கலைக்கு எடுத்துக்காட்டு அரலுகுப்பே சென்னகேசவா கோவில்
ADDED : நவ 04, 2024 09:56 PM

- நமது நிருபர் -
கர்நாடகாவில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. இவற்றில் ஒரு கோவிலை பற்றி பார்ப்போம்.
துமகூரு நகரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது அரலுகுப்பே என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் 4,000 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்த கிராமம் இயற்கையின் அழகு, பிரமிக்க வைக்கும் கட்டட கலைகளுக்கு பெயர் பெற்றது. இந்த கிராமத்தில் அமைந்துள்ளது சென்னகேசவா கோவில்.
கர்நாடகாவை 11 முதல் 14ம் நுாற்றாண்டுகளில் ஆண்ட ஹொய்சாளர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பிரதான சன்னிதியில் விஷ்ணுவின் சிலை உள்ளது. அதன் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும் உள்ளன.
கோவிலின் வெளிப்புற சுவர்களில் பல்வேறு கடவுள்கள், புராண உயிரினங்களை சித்தரிக்கும் வகையிலான சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த கோவிலின் தனி சிறப்பு, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள படிக்கட்டு கிணறுதான். அந்த கிணறு தொடர்ச்சியான படிகளை கொண்டது. சடங்கு நோக்கங்களுக்காக அந்த கிணறை பயன்படுத்துகின்றனர்.
கிணற்றில் உள்ள நீரை புனித தீர்த்தமாக பக்தர்கள் கருதுகின்றனர். இதனால் பாத்திரங்களில் கிணற்றுத் தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில், இந்த கோவிலில் ஆண்டு திருவிழா நடக்கும். அப்போது கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். இந்த கோவிலின் நடை தினமும் காலை 8:00 முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து அரலுகுப்பே கிராமம் 137 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து துமகூருக்கு அடிக்கடி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
துமகூரு சென்று அங்கிருந்து வாடகை கார்களில் கோவிலை சென்றடையலாம்.
ரயிலில் என்றால் துமகூரு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவிலுக்குச் செல்ல வேண்டும்.