எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் திடீர் போர்க்கொடி
எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் திடீர் போர்க்கொடி
ADDED : ஜூலை 31, 2011 10:52 PM
பெங்களூரு:சதானந்த கவுடாவை கர்நாடக முதல்வராக அறிவிக்காவிட்டால், ராஜினாமா
செய்வதாக எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததும், அடுத்த முதல்வர் எப்போது
தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.கவர்னர் பரத்வாஜிடம்
ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின், முதல்வர் அளித்த பேட்டி இறுதியில்,
கர்நாடக அடுத்த முதல்வராக சதானந்த கவுடாவுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன்,
என்று வெளிப்படையாக அறிவித்தார். இதுவரை அவர், அடுத்த முதல்வர் யார் என்று
தெரிவிக்காமல் இருந்தார்.எடியூரப்பா ராஜினாமா செய்தவுடன், பிரச்னை தீரும்
என்று மேலிட தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், புதிது புதிதாக பிரச்னைகள்
வெடித்தவண்ணம் உள்ளன.பெங்களூரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்த மேலிட
தலைவர்கள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, மேலிட பொறுப்பாளர்
தர்மேந்திர பிரதான் ஆகியோரை, முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, சதானந்த கவுடாவும் உடனிருந்தார்.அப்போது எடியூரப்பா
கூறுகையில், ''சதானந்த கவுடாவை முதல்வராக ஆக்குவோம், என்று இரவுக்குள்
அறிவிக்க வேண்டும். எனது நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,''
என்றார். முதல்வர் எடியூரப்பா கூறியது போல், சதானந்த கவுடாவை முதல்வராக
அறிவிக்காவிட்டால், நாங்கள் ராஜினாமா செய்வோம், என்று எடியூரப்பா ஆதரவு
எம்.எல்.ஏ.,க்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.அதேபோல், எடியூரப்பாவின்
எதிரணியை சேர்ந்த அனந்தகுமார், ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரும் மேலிட தலைவர்களை
சந்தித்து பேசினர்.பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளதோ,
அவர்களுக்கே முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.,ம்
விரும்புவதாக தெரிகிறது.மேலிட தலைவர்கள் தங்கியிருந்த தனியார் ஓட்டலில்,
நேற்றிரவு வரை பரபரப்பு நிலவியது. இரவு 8 மணிக்கு டில்லி செல்வதாக இருந்த
மேலிட தலைவர்களின் பயணமும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், புதிய முதல்வர்
தேர்வு, குழப்பத்தில் உள்ளது.