'உங்கள் எதிரி நாங்களா?' ராகுலுக்கு கம்யூ., கேள்வி!
'உங்கள் எதிரி நாங்களா?' ராகுலுக்கு கம்யூ., கேள்வி!
ADDED : மார் 09, 2024 11:40 PM

புதுடில்லி: ''ஒரு தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உரிமை. ஆனால், தங்களுடைய எதிரி பா.ஜ.,வா அல்லது நாங்களா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. சில மாநிலங்களில் கூட்டணி அமைத்தாலும், கேரளாவில் இரு கட்சிகளும் எதிரெதிர் அணியில் உள்ளன.
கேரளாவின் வயநாடு தொகுதிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில், வயநாடு தொகுதியின் வேட்பாளராக தற்போதைய எம்.பி.,யான ராகுல் பெயர் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து ராஜா நேற்று கூறியதாவது:
இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சில பிரச்னைகள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும் தங்கள் நலனை பாதுகாக்க விரும்புகின்றன. இதில் தவறேதும் இல்லை.
ஒரு தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்க அனைத்து கட்சிகளுக்கும் உரிமை உள்ளன. அதே நேரத்தில், காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல், தேசிய தலைவர். அவர் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான போட்டியை கொடுக்கும் வகையிலான தொகுதியில் போட்டியிட வேண்டும். கேரளாவில் கூட்டணியில் எங்களுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
அதனால் அங்கு வேட்பாளர்களை நிறுத்திஉள்ளோம்.உங்களுடைய இலக்கு மற்றும் எதிரி பா.ஜ.,வா அல்லது நாங்களா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

