நில மோசடி வழக்கில் சித்து மீதான வாதம்...நாளை! கவர்னர் தரப்பில் காரசார விவாதம்
நில மோசடி வழக்கில் சித்து மீதான வாதம்...நாளை! கவர்னர் தரப்பில் காரசார விவாதம்
ADDED : செப் 01, 2024 04:50 AM
பெங்களூரு : 'மூடா' விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனு மீது நேற்று விசாரணை நடந்தது. கவர்னர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காரசாரமாக வாதாடினார். விசாரணை, நாளை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.நாளை!
'மூடா' முறைகேடு வழக்கில், தன் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதிக்கு தடை கோரி, முதல்வர் சித்தராமையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஆகஸ்ட் 19ம் தேதி ரிட் மனுசத் தாக்கல் செய்தார்.
இம்மனு தொடர்பாக முதல்வர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதையடுத்து, நேற்று காலை 10:30 மணிக்கு மனு மீண்டும் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
முதல்வர் சிபாரிசு
அப்போது, கவர்னர் தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேரில் ஆஜராகி வாதாடியதாவது:
முதல்வருக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி அளிக்க, அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் ஏற்கவேண்டியதில்லை. ஏனென்றால், அந்த அமைச்சர்கள் முதல்வரால் நியமிக்கப்பட்டவர்கள்.
சட்டத்தின் படி, இந்த வழக்கை விசாரிக்கலாம் என கவர்னர் அனுமதி அளித்துள்ளார். உண்மை காரணங்களின் அடிப்படையில் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்.
ஊழல் ஒழிப்பு சட்ட பிரிவு 17 ஏ, அனைத்து இடங்களிலும் பொருந்தும். லலிதா குமாரி தீர்ப்பின் அடிப்படையில், குற்றம் நடந்தது உண்மை என்ற உடன், கவர்னரோ அல்லது தாசில்தாரோ தன்னிச்சையாக செயல்படலாம்.
ஊழல் ஒழிப்பு சட்டப்பிரிவு, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். சமூக ஆர்வலர் ஆபிரகாம் அளித்த புகாரை பரிசீலனை செய்தபோது, முதல்வர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது கவர்னருக்கு தெரிந்ததால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தலைமை செயலர்
இதே போன்று மேலும், இருவர் புகார் அளித்தனர். ஏற்கனவே நோட்டீஸ் வழங்கிய நிலையில், அதே குற்றச்சாட்டு குறித்து மீண்டும் நோட்டீஸ் வழங்கத் தேவையில்லை.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக தெரிந்தால், அரசு சேவகன் மீது யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்க அனுமதி பெறலாம் என, நீங்களே ஒரு வழக்கில் கூறியுள்ளீர்கள்.
இந்த வழக்கில் தலைமை செயலரும் விளக்கம் அளித்துள்ளார். அதே கோப்பு, அட்வகேட் ஜெனரலுக்கும் சென்றுள்ளது. பின்னர் தான், அமைச்சரவை கூட்டத்துக்கு சென்றுள்ளது. அந்த ஆவணங்களின் அடிப்படையில், 90 பக்கங்கள் கொண்ட பரிந்துரை கடிதத்தை, அமைச்சரவை கூட்டம் கவர்னருக்கு அனுப்பி உள்ளது.
இவ்வளவு பக்கங்கள் கொண்ட கடிதம், சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் எழுதியது இதுவே முதல் முறை என்று கருதுகிறேன். ஆனால், அனைத்தையும் பரிசீலித்த கவர்னர், ஆறு பக்கத்தில் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
ஒருதலைப்பட்சமாக
மேலும், சட்ட பிரிவு 17 ஏ கீழ், விசாரணைக்கு அனுமதி அளிக்கும்போது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கவர்னர் விரும்பினாலும், முதல்வர் விஷயத்தில் அமைச்சரவையின் ஆலோசனையை பெறக் கூடாது என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் முடிவு ஏன் ஒருதலைப்பட்சமாக உள்ளது என்பது குறித்து, கவர்னர் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் மீது விசாரணை நடத்த அவசரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையல்ல.
முதலில் தலைமை செயலரிடம் அறிக்கை பெறப்பட்டது. அதன்பின், ஆட்சேபனை தெரிவிக்க முதல்வருக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
'கட், பேஸ்ட்'
சில சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு பிரதிநிதிக்கு அரசியலமைப்பு படி, அதிகாரம் உள்ளது. கவர்னரின் கவனத்திற்கு வந்தவுடன் விசாரணையை அனுமதிக்க வேண்டும்.
ஊழல் ஒழிப்பு சட்டத்தின் 17ஏ பிரிவுக்கு அனுமதி அளித்து, விசாரணையை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே தாமதமின்றி வழக்குப் பதிவு செய்து, விசாரணை துவங்க வேண்டும்.
தலைமை செயலர் வழங்கிய அறிக்கையை, முதல்வரிடம் அட்வகேட் ஜெனரல் வழங்கியுள்ளார். அந்த அறிக்கையை சரி செய்யாமல், 'கட் அண்ட் பேஸ்ட்' செய்து, கவர்னருக்கு முதல்வர் பதிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலர் வழங்கிய அறிக்கையில் இருந்த அரைப்புள்ளி, காற்புள்ளி, எழுத்து வடிவத்தைக்கூட சரி செய்யவில்லை.
நாட்டின் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் 'காபி' அடிப்பதற்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்தால் கூட, சரியாக செய்திருக்கலாம். மனிதர்களின் முட்டாள்தனம் போன்று, செயற்கை நுண்ணறிவு செய்யாது. நீதிமன்றத்திலும் அதே ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை கமிட்டி
முதல்வருக்கு முறைகேட்டில் தொடர்பு இல்லை என்று கூறுகின்றனர். அப்படி என்றால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி அமைத்தது ஏன்?
இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், முறைகேடு நடந்துள்ளது உண்மை என்று. எனவே எந்த காரணத்துக்கும், கவர்னர் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதன் பின், கேவியட் மனுத் தாக்கல் செய்திருந்த சமூக ஆர்வலர் பிரதீப் குமார் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பிரபுலிங்க நாவடகி; ஆபிரகாம் தரப்பில் வழக்கறிஞர் ரங்கநாத் ஆகியோர் வாதாடினர்.
முதல்வர் தரப்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி இருந்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை திங்கள்கிழமை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர், கவர்னர் உட்பட சிலர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நிறைவு பெற்றதால், அன்றைய தினம் மற்ற தரப்பு வழக்கறிஞர்கள் வாதாட உள்ளனர்.