sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத விவகாரங்களில் தலையிடவில்லை உச்சநீதிமன்றத்தில் வாதம்

/

மத விவகாரங்களில் தலையிடவில்லை உச்சநீதிமன்றத்தில் வாதம்

மத விவகாரங்களில் தலையிடவில்லை உச்சநீதிமன்றத்தில் வாதம்

மத விவகாரங்களில் தலையிடவில்லை உச்சநீதிமன்றத்தில் வாதம்

9


UPDATED : மே 22, 2025 12:22 AM

ADDED : மே 22, 2025 12:20 AM

Google News

UPDATED : மே 22, 2025 12:22 AM ADDED : மே 22, 2025 12:20 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வக்ப் திருத்த சட்டம், முஸ்லிம்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை. வக்ப் என்பது ஒரு இஸ்லாமிய கருத்தியல் தான்; அது முஸ்லிம்களின் அடிப்படையான அல்லது அத்தியாவசியமான மத நடவடிக்கை அல்ல' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் விசாரணை துவங்கியது. மனுதாரர்கள் தரப்பில் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராஜீவ் தவான் வாதிட்டனர்.

நன்கொடை


'எந்த ஒரு சட்டமும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது தான் என்று பொதுமக்கள் நம்புகின்றனர். இந்த சட்டத்துக்கும் அது பொருந்தும். இதை ஆட்சேபிப்பவர்கள், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதை நிரூபிக்க வலுவான காரணங்களை தெரிவிக்க வேண்டும்' என, தலைமை நீதிபதி கவாய் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.

இரண்டாவது நாளாக இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடர்ந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அவர் வாதம் வருமாறு:

வக்ப் என்பது ஒரு கருத்தியல் தான்; அது இஸ்லாமிய சமூகத்தில் உருவான கருத்தே தவிர, அந்த மார்க்கத்தின் ஒரு வழிகாட்டு நெறி அல்ல. பல இஸ்லாமிய நாடுகளில் கூட இந்த கருத்தியல் ஒரு சமூக நிறுவனமாக அங்கீகரிக்கப்படவில்லை.

மற்ற மதங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஹிந்துக்கள் கோவில்களில் காணிக்கை செலுத்துவர். சீக்கியர்களும் அப்படித்தான். ஆனால், முஸ்லிம்கள் நன்கொடை அளிக்கின்றனர்.

அதனால், வக்ப் என்பது நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களை பராமரிப்பதற்கான ஒரு நிர்வாக அமைப்பு தான். வழிபாடுக்கும், வழிபாடு தொடர்பான நடைமுறைகளுக்கும் அதோடு எந்த சம்பந்தமும் கிடையாது.

ஹிந்து சமய அறநிலையத் துறை வாயிலாக கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கோவில் பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை அந்த துறையே கவனிக்கிறது.

அதனால், கோவில்களில் பணியாற்றுவோர் ஹிந்துக்களாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், வக்ப் என்கிற சொத்து நிர்வாக அமைப்பு, மத ரீதியிலான விஷயங்களில் ஈடுபடுவது இல்லை.

எனவே, வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோரையும் சேர்ப்பதில் எந்த தவறுக்கும் இடமில்லை. அதற்கு புதிய சட்டம் வழிவகுக்கிறது. தங்கள் சொத்து முஸ்லிம்களால் பறிக்கப்படுகிறது என்ற தவறான கண்ணோட்டம் யாருக்காவது ஏற்பட்டால், அதற்கும் இந்த ஏற்பாடு விடை அளிக்கும்.

விதிவிலக்கு அல்ல


வக்ப் வாரியத்தில் ஒன்று அல்லது இரண்டு மாற்று மதத்தவர் இருந்தால், எதுவும் மாறி விடாது. அவர்களின் எண்ணிக்கை சிறுபான்மையாகத்தான் இருக்கும். வாரியம் சரியாக நிர்வகிக்கப்படுகிறது என்பதை உணர்த்த இது உதவும்.

'வக்ப் பை யூசர்' என்பது ஒருவர் எந்த ஆதாரமும் இல்லாமல் வழங்கியதாக கூறப்படும் சொத்தை, மற்றொருவர் நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தார் அல்லது வருகிறார் என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து, வக்ப் சொத்தாக அடையாளம் காண்பதாகும்.

பெரும்பாலும் இத்தகைய சொத்து பரிமாற்றத்தில் நில உரிமை சான்றுகள், ஆவணங்கள், தரவுகள் இருப்பதில்லை. யாரும் யாருக்கும் நன்கொடையாக வழங்கியதற்கான ஆதாரமும் இருப்பதில்லை.

இதனால், அதிகப்படியான முறைகேடுகள் நடக்க வழி உண்டாகிறது. யாருடைய சொத்தையும், எந்த ஆதாரமும் இல்லாமல், வக்ப் வாரியம் உரிமை கொண்டாட வழி பிறக்கிறது. இதற்கு அரசு நிலங்களும் விதிவிலக்கு அல்ல.

தவறான முறையில் கைப்பற்றிய இது போன்ற சொத்துக்களை மீட்பதற்கும், பாதுகாப்பதற்கும் அரசுக்கு உரிமை உள்ளது. அரசு நிலங்கள் அரசுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

அனுமதி


'வக்ப் பை யூசர்' என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் கூறுகின்றன. உரிமை கோரியவர் அதை அனுபவிக்க அனுமதி அளித்தாலும், அதை திரும்பப் பெற அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன.

அந்த அடிப்படையில் தான், அரசுக்கோ, வேறு நபர்களுக்கோ, அமைப்புகளுக்கோ சொந்தமான நிலங்கள், முறையான ஆவணங்கள் இல்லாத, பதிவு செய்யப்படாத சொத்துகள், வக்ப் பட்டியலில் இருந்து நீக்கி மீட்கப்படும் என்று திருத்தப்பட்ட சட்டம் கூறுகிறது.

முறையாக, சரியாக சொத்து பரிமாற்றம் செய்தவர்கள் எவரும் இது குறித்து அச்சப்பட அவசியமே இல்லை. நீண்ட நெடுங்காலமாக அரசுக்கு சொந்தமாக இருந்த நிலங்களும், சிறிய காலகட்டத்தில் வக்ப் சொத்துக்களாக மாற்றம் செய்யப்பட்டதை பார்த்தால், இந்த திருத்தத்தின் அவசியம் சட்டென புலப்படும்.

இதில் எந்த இடத்திலும், முஸ்லிம்களின் மத நம்பிக்கையில், சம்பிரதாயங்களில் புதிய சட்டம் தலையிடவே இல்லை. இது முழுக்க முழுக்க சொத்து நிர்வாகம் தொடர்பான நடைமுறைகளில் திருத்தங்களை செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், வக்ப் சொத்துகளை வேறு எவரும் துஷ்பிரயோகம் செய்யவிடாமல் தடுப்பதும் இந்த சட்ட திருத்தத்தின் நோக்கமாகும். வக்ப் சொத்துகளை பாதுகாக்க இது பெரிதும் உதவும்.

ஒரு சொத்து அல்லது நிலம் வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது தானா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் அரசுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள் என்பது தவறான வாதம். யாருக்கு சொந்தம் என்பதை கலெக்டர் விசாரித்து முடிவு செய்தாலும், அதற்கு உரிமை கோரி பெறுவதற்கு கலெக்டரே நீதிமன்றத்த்துக்கு தான் செல்ல வேண்டும். கோர்ட் உத்தரவு இல்லாமல் சொத்துரிமை கிடைக்காது.

வக்ப் என்பது, முஸ்லிம்களின் கட்டாய மத நம்பிக்கை கிடையாது என்று அம்பேத்கரே கூறியுள்ளார். மேலும், வேறு எந்த நாட்டிலும், இதுபோன்ற வக்ப் சொத்து நிர்வாகம் நடப்பதில்லை. இஸ்லாமிய நாடுகளும் இதில் விதிவிலக்கு அல்ல. வக்ப் சொத்து நிர்வாகத்தை முறைப்படுத்துவதே வக்ப் திருத்த சட்டத்தின் நோக்கம். முஸ்லிம்களின் மத சம்பிரதாயங்களிலும் பழக்க வழக்கங்களிலும் தலையிடுவது அரசின் நோக்கம் அல்ல.

இவ்வாறு துஷார் மேத்தா வாதிட்டார். விசாரணை, இன்றும் தொடர்கிறது.

தி.மு.க., கோரிக்கை நிராகரிப்பு

நேற்று நடந்த விசாரணையின்போது, 'தி.மு.க., - எம்.பி., ராஜா தாக்கல் செய்த மனுவில், பார்லிமென்ட் கூட்டுக் குழுவில் நடைபெற்ற விபரங்களையும் நீதிமன்றத்தில் வாதங்களாக முன்வைக்க அனுமதிக்க கோரியுள்ளார்' என, மூத்த வழக்கறிஞர் வில்சன் குறிப்பிட்டார்.அந்த கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ''ஏற்கனவே என்னென்ன விஷயங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என வகைப்படுத்தப்பட்டுள்ளதோ அவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மற்ற விஷயங்கள் ஏதேனும் இருந்தால் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்யும்போது மனுதாரர்கள் தெரிவிக்கலாம்,'' என்றார்.



- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us