நேபாளத்தில் சிக்கிய 'ஆயுத சப்ளையர்' டில்லி அழைத்து வந்து தீவிர விசாரணை
நேபாளத்தில் சிக்கிய 'ஆயுத சப்ளையர்' டில்லி அழைத்து வந்து தீவிர விசாரணை
ADDED : ஆக 14, 2025 01:14 AM

புதுடில்லி: நேபாளத்தில் கைது செய்யப்பட்ட பிரபல 'ஆயுத சப்ளையர்' சலீம் பிஸ்டலை இந்தியா அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டில்லியில் உள்ள சீலம்பூரில் வசித்து வந்த சலீம் பிஸ்டல், நம் நாட்டில் தேடப்படும் ஆயுத சப்ளையராக அறிவிக்கப்பட்டவர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து அதிநவீன ஆயுதங்களை கடத்தி வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோய், ஹாஷிம் பாபா உள்ளிட்ட நிழல்உலக தாதாக்களுக்கு ஆயுதங்களை விற்றுள்ளார்.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு, தாவூத் இப்ராஹிம் தலைமையிலான, 'டி - கம்பெனி'க்கு உதவியது என, பல்வேறு குற்றச்சாட்டுகளில் சலீம் பிஸ்டல் பேர் இடம்பெற்றுள்ளது.
கடந்த, 2018ல் டில்லியில் கைது செய்யப்பட்ட சலீம், ஜாமின் பெற்ற பின் தலை மறைவானார். இதையடுத்து நம் அண்டை நாடான நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அண்மையில் தகவல் கொடுத்தது.
இதன்பேரில் அங்கு சென்ற டில்லி சிறப்பு பிரிவு போலீசார், சலீம் பிஸ்டலை கடந்த 9ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், சலீம் பிஸ்டல் டில்லிக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். டில்லி போலீஸ் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரிடம், பாக்., உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., உடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.