பாக்., மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு பச்சைக்கொடி! ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி உத்தரவு
பாக்., மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு பச்சைக்கொடி! ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி உத்தரவு
UPDATED : ஏப் 30, 2025 05:03 AM
ADDED : ஏப் 30, 2025 12:32 AM

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ''எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 26 சுற்றுலா பயணியரை கொடூரமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என, பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
![]() |
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் மிக உயர்ந்த அமைப்பான, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் டில்லியில் இன்று நடக்கிறது.
கடந்த ஏழு நாட்களில் இந்த குழு இரண்டாவது முறையாக இன்று கூடுகிறது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
![]() |
இந்த கூட்டத்திற்கு முதல் நாளான நேற்று, டில்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், பிரதமருடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர்.
முழு சுதந்திரம்
இதில், பிரதமர் மோடி பேசியதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பயங்கரவாதத்தை வேருடன் ஒழிப்பதில் நாடு உறுதியுடன் உள்ளது. நம் முப்படைகளின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்க பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்குகிறேன்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கூட்டத்திற்கு பின், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் நேற்று நடந்தது. இதில் சாலை போக்குவரத்து, சுகாதாரம், வேளாண், ரயில்வே உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டியும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துடனும், பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு அளிக்கப்போகும் பதிலடி குறித்து, அடுத்தடுத்து நடந்த இந்த கூட்டங்களில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால், எந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என தெரிகிறது.
அவசர கூட்டம்
மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையில், உயர்மட்ட கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
இதில், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பிரிகு ஸ்ரீனிவாசன், அசாம் ரைபிள்ஸ் படையின் இயக்குநர் ஜெனரல் விகாஸ் லக்கேரா ஆகியோர் பங்கேற்றனர்.