உயிரி செயல்பாடு மையத்தில் 'ஸ்டார்ட்- அப்' துவங்க ஏற்பாடு
உயிரி செயல்பாடு மையத்தில் 'ஸ்டார்ட்- அப்' துவங்க ஏற்பாடு
ADDED : ஜன 17, 2025 07:14 AM
பெங்களூரு: எலக்ட்ரானிக் சிட்டி ஐ.பி.ஏ.பி., காம்ப்ளக்சில் கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சொந்தமான உயிரி கண்டுபிடிப்பு மையம் உள்ளது. இங்கே ஏராளமான ஆராய்ச்சி மையங்கள், ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு 10:30 மணிக்கு உயிரி கண்டுபிடிப்பு மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பெர்ம்பாக்ஸ் நிறுவனத்தின் 3 ஆய்வகங்கள், பி. ஹெச். ஒய். நிறுவனத்தின் 3 ஆய்வகங்கள், அஜிதா புரோட்டக், களோர், இகேசியா நிறுவனத்தின் ஒரு ஆய்வகம்; இம்யூனிடாஸ், யோகோ கவா நிறுவனத்தின் இரண்டு ஆய்வகங்கள் மற்றும் 8 ஸ்டார்ட் -அப் நிறுவனங்களில் சேதம் ஏற்பட்டது.
இதில் பல பொருள்கள் எரிந்து நாசமானதில் 150 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் பிரியங்க் கார்கே ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உடனடி தேவைக்கு ஆதரவான உபகரணங்களை வாங்குவது குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம்.
இந்த தீ விபத்து முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும் அவற்றை மீண்டும் உருவாக்க உதவுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். காங்கிரஸ் அரசு தொழில் துறையினருடன் உறுதியாக நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கு விரைவில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை துவங்க ஏற்பாடு நடக்கிறது.