மனைவி, குழந்தைகளை கொன்று நாடகமாடிய பிசியோதெரபிஸ்ட் கைது
மனைவி, குழந்தைகளை கொன்று நாடகமாடிய பிசியோதெரபிஸ்ட் கைது
UPDATED : ஜூலை 18, 2024 11:51 AM
ADDED : ஜூலை 17, 2024 11:56 PM

ஹைதராபாத்: மனைவி, இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, கார் விபத்தில் பலியானதாக நாடகமாடிய பிசியோதெரபிஸ்ட், 48 நாட்களுக்கு பின் பிடிபட்டார்.
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டம் ரகுநாதபாலம் பகுதியைச் சேர்ந்தவர் போடா பிரவீன், 32; பிசியோதெரபிஸ்ட். இவர் ஹைதராபாதில் உள்ள அட்டாபூர் பகுதி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
பிரவீனுக்கு திருமணமாகி குமாரி, 29, என்ற மனைவியும்; கிருஷிகா, 5, கிருத்திகா, 3, என்ற இரு பெண் குழந்தைகளும் இருந்தனர்.
இந்நிலையில், பிரவீனுக்கு தன்னுடன் நர்சாக வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த சோனி பிரான்சிஸ் என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.
இதை மனைவி மற்றும் உறவினர்கள் கண்டித்தும், சோனியுடனான தொடர்பை பிரவீன் துண்டிக்க மறுத்துள்ளார்.
மனைவி மற்றும் குழந்தைகளை கடந்த மே 28ல் காரில் சொந்த ஊருக்கு அழைத்து சென்ற பிரவீன், வழியில் மயக்க ஊசி போட்டு மனைவியை கொன்றார்; இரு குழந்தைகளையும், மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சு திணறடித்து கொன்றார்.
பின்னர், காரை வழியில் உள்ள மரத்தில் மோதவிட்டு விபத்து போல் காட்டிஉள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை சோதனையிட்டபோது, அதில் காலியான ஊசி ஒன்று கிடந்ததை கண்டுபிடித்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட மூவருக்கும் காயம் எதுவும் ஏற்படாததால் சந்தேகம் அடைந்து பிரவீனிடம் விசாரித்தனர்.
அப்போது மனைவி, இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, விபத்து என பிரவீன் நாடகமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து பிரவீனை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.