ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் தென் ஆப்ரிக்காவில் கைது
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் தென் ஆப்ரிக்காவில் கைது
ADDED : மார் 03, 2024 03:30 AM
புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முகமது கவுஸ் நியாசி என்பவரை, தென் ஆப்ரிக்காவில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரில், 2016ம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ருத்ரேஷ் கொலை செய்யப் பட்டார்.
இச்சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட, பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த முகமது கவுஸ் நியாசி, நம் நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தார்.
ஒவ்வொரு முறையும் இருப்பிடத்தை மாற்றியபடியே அவர் உலா வந்தார்.
தேடப்படும் முக்கிய தாதாவான முகமது கவுஸ் நியாசி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.
முகமது கவுஸ் நியாசியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அவர் தென் ஆப்ரிக்காவில் இருப்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரியப்படுத்தினர்.
இதையடுத்து, முகமது கவுஸ் நியாசியை தென் ஆப்ரிக்க அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அந்நாட்டுக்கு விரைந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், முகமது கவுஸ் நியாசியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, மஹாராஷ்டிராவின் மும்பையில் விசாரணையை எதிர்கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

