ADDED : ஜூன் 22, 2024 01:07 AM
புதுடில்லி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நடந்த பணப் பரிமாற்ற மோசடியில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத் துறையினர் மார்ச் 21ல் கைது செய்தனர்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ல் மீண்டும் திஹார் சிறையில் சரண் அடைந்தார்.
விசாரணை
இந்நிலையில், ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து நேற்று காலை வெளியே வருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இதற்கிடையே, ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சுதிர் குமார் ஜெயின், ரவீந்தர் துடேஜா அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டதாவது:
விசாரணை நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, எங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக எடுத்து வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க, 2 - 3 நாட்கள் அவகாசம் தரப்படவில்லை.
தீர்ப்பு வழங்க வேண்டி இருப்பதால், வாதங்களை அரை மணி நேரத்தில் முடிக்கும்படி விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, ஜாமின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
ஒத்திவைப்பு
கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டதாவது:
அரசு வழக்கறிஞரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. அவர்களால் எதையும் கருணையுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சத்தமாக பேசுவதால் பிரச்னை தீர்ந்து விடாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை தொடர்ந்து, வழக்கு ஆவணங்கள் நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், மனு மீதான தீர்ப்பை 2 - 3 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால், ஜாமின் கிடைத்தும் வெளியே வர முடியாத நிலைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தள்ளப்பட்டுள்ளார்.