பிரச்னைக்கு காரணம் வகுப்புவாத அரசியல் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
பிரச்னைக்கு காரணம் வகுப்புவாத அரசியல் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
ADDED : மே 21, 2025 03:23 AM

புதுடில்லி:“நம் நாட்டில், 75 ஆண்டுகளாக பிரதான அரசியல் கட்சிகளால் கடைப்பிடிக்கப்படும் வகுப்புவாத அரசியல்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணம்,”என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவு, 'மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம்' என பெயர் மாற்றப்பட்டு, அதன் துவக்க விழா நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கியப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதில், வரலாற்று ரீதியாக ஹிந்து - -முஸ்லிம் அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றன.
நம் நாடு நிறைய பிரச்னைகளை எதிர்கொள்கிறது. மக்களுக்கு உணவு மற்றும் தரமான கல்வி கிடைக்கவில்லை. பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள், 75 ஆண்டுகளில் அரசியலில் மட்டுமே ஈடுபட்டுள்ளதே இதற்குக் காரணம். இந்தக் கட்சிகள் வகுப்புவாத அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
பள்ளிக் குழந்தைகளுக்கு ஹிந்து- - முஸ்லிம் பிரிவினை பற்றி மட்டுமே இந்தக் கட்சிகள் கற்பிக்கின்றன. இதுவே, நம் நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணம்.
தலைநகர் டில்லியில், ஆம் ஆத்மி தன் 10 ஆண்டு ஆட்சியில் கட்டமைத்த சர்வதேச தரத்திலான கல்வி முறையை, பா.ஜ., ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்குள் அதை அழிக்கும் பணியை துவக்கி விட்டது. ஆம் ஆத்மி ஆட்சியில் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது, தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன.
அதேபோல, தினமும் நான்கு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுவே, ஆம் ஆத்மி ஆட்சியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.
ஆம் ஆத்மியின், மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம் சார்பில், நாடு முழுதும் கல்லூரிகளில் மாணவர் கலாசாரக் குழுக்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, அவத் ஓஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.