ADDED : பிப் 06, 2025 11:11 PM

மாண்டியா: ''முதல்வர் சித்தராமையா மாற்றம் நிச்சயம்,'' என்று, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் அடித்து கூறினார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., தலைவராக விஜயேந்திரா நீடிக்க வேண்டும் என்று, மேலிடத்திடம் எடுத்து சொல்வதற்கு, விஜயேந்திராவின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். எத்னால் அணியும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்துகின்றனர். இது கட்சிக்கு நல்லது இல்லை.
நான் பா.ஜ.,வில் இணைந்து 50 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 18 வயதாக இருந்த போது கட்சியில் இணைந்தேன். அவசர நிலையின் போது சிறையில் இருந்தேன். எனது மாமா, சகோதரரும் சிறையில் இருந்தனர். நான் போராட்டத்தின் மூலம் இந்த நிலைக்கு வந்து உள்ளேன்.
நானும், அனந்தகுமாரும் சேர்ந்து பெங்களூரில் கட்சியை உருவாக்கினோம். பழைய மைசூரிலும் கட்சியை வளர்க்க முயற்சி செய்தோம். கட்சிக்குள் சண்டை போடுவதால், காங்., அரசுக்கு தான் லாபம். எதிர்க்கட்சியாக இருக்கும் நாம் அரசை எதிர்த்து தான் போராட வேண்டும். மேலிட தலைவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன்.
இங்கு நடக்கும் விஷயங்களை மேலிட கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். அவர்கள் முடிவு எடுப்பர். பா.ஜ., மாநில தலைவரை மாற்றுவது குறித்து மூன்று ஆண்டுக்கு ஒரு முறை முடிவு எடுக்கப்பட வேண்டும். தேசிய தலைவர் நட்டா மாற போகிறார். மாநில தலைவரை மாற்றுவது, தேசிய தலைவரின் முடிவு. அனைவருக்கும் தலைவர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. எத்னாலும் முக்கியமான தலைவர்.
நவம்பரில் முதல்வர் மாற்றம் நடக்கும் என்று நான் கூறியது உண்மை தான். அடித்து சொல்கிறேன். நான் ஜோதிடர் இல்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர். டில்லியிலும் எனக்கு தொடர்பு உள்ளது. முதல்வர் மாற்றம் நிச்சயம். ஆனால், அடுத்த முதல்வர் யார் என்று எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர்கூறினார்.

