மாட்டிக்கினாரு அஷ்வினு.... செஞ்சுரி அடிச்சாப்போதுமா; சம்சாரத்தை சமாளிக்கவும் தெரிஞ்சுருக்கணும்!
மாட்டிக்கினாரு அஷ்வினு.... செஞ்சுரி அடிச்சாப்போதுமா; சம்சாரத்தை சமாளிக்கவும் தெரிஞ்சுருக்கணும்!
UPDATED : செப் 23, 2024 11:24 AM
ADDED : செப் 23, 2024 11:22 AM

சென்னை: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் அஷ்வின் மற்றும் அவரது மனைவி கலந்துரையாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது நம் மண்ணின் மைந்தன் அஷ்வின் தான். முதல் இன்னிங்சில் விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, களமிறங்கிய அவர், சிறப்பாக விளையாடி, 133 பந்துகளில் 113 ரன்கள் குவித்து, அணியின் ரன் குவிப்புக்கு காரணமாக இருந்தார்.
அதேபோல, 2வது இன்னிங்சில் தனது சுழல் மாயாஜாலத்தால் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி, இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்த அஷ்வின், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் இந்தப் போட்டி முடிந்த பிறகு, அஷ்வின், அவரது மனைவி ப்ரீத்தி மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடும் வீடியோவை பி.சி.சி.ஐ., தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அப்போது, மகள்கள் தினத்திற்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள் என்பதை அறிய உங்களின் மகள்கள் ஆர்வமாக இருப்பதாக ப்ரீத்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அஷ்வின், 5 விக்கெட்டுக்களை எடுத்த பந்தை பரிசளிப்பதாக கூறியதும், அதற்கு அவரது மகள்கள் வேண்டாம் எனக் கூறினர்.
சொந்த மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை எப்படி உணர்கிறீர்கள்? என ப்ரீத்தி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அஷ்வின், 'இதற்கு எப்படி பதிலளிப்பது என தெரியவில்லை. முதல் நாளில் மிகவும் வேகமாக அனைத்தும் நடந்துவிட்டது. நான் சதம் அடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது சிறப்பான தருணம். ஒவ்வொரு முறை இங்கு வரும் போது, சிறப்பானதாக உணர்கிறேன். இந்த மைதானத்திற்கு வரும் போது மட்டும் எனக்கு புது எனர்ஜி வருகிறது,' எனக் கூறினார்.
அப்போது, முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு தன்னை சந்திக்க வராதது குறித்து மனைவி ப்ரீத்தி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அஷ்வின், 'முதல் நாளில் தன்னை சந்திக்கவில்லை என்று தொடர்ந்து புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். விளையாடிக் கொண்டிருக்கும் போது, குடும்பத்தினர் மீது என்னால் கவனம் செலுத்த முடியாது. இருப்பினும், ஒரு ஹாய் கூற மாட்டீர்களா? எனக் குழந்தைகள் கேட்டதனால், சிறிது கவனம் செலுத்த முயன்றேன், என நகைச்சுவையாகக் கூறி சமாளித்தார்.