ADDED : மார் 18, 2024 06:03 AM
பெலகாவி, : ஹெல்மெட் அணியாததால், சாலை விபத்தில் ஏ.எஸ்.ஐ., பலியான சம்பவத்தில், உத்தரவை பின்பற்ற தவறிய எஸ்.ஐ.,யை, 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
பெலகாவியின் யரகட்டி டவுனில் வசித்து வந்தவர் ஏ.எஸ்.ஐ., விஜயகாந்தா மிகாய், 51. இவர், பைலஹொங்கலில் உள்ள தொட்டவாடா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன், பணி முடித்து இரவு வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். யரகட்டி அருகே செல்லும் திடீரென சாலையில் வேகத்தடை மீது ஏறி இறங்கியதில் கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்த அவர், உயிரிழந்தார்.
விசாரணையில், அவர் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. முன்னதாக, எஸ்.பி., பீமா சங்கர் குலேத், 'போலீஸ் அதிகாரிகள் அனைவரும், இரு சக்கர வாகனத்தில் சென்றால், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இதை எஸ்.ஐ., நந்தீஷ், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு முறையாக எடுத்து கூறவில்லை என்பதால், அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

