ஆசியா - பசிபிக் விமான விபத்து விசாரணை அதிகாரிகள் கூட்டம் டில்லியில் நாளை துவங்குகிறது
ஆசியா - பசிபிக் விமான விபத்து விசாரணை அதிகாரிகள் கூட்டம் டில்லியில் நாளை துவங்குகிறது
ADDED : அக் 27, 2025 08:54 AM
புதுடில்லி: ஆசியா - பசிபிக் விமான விபத்து புலனாய்வாளர்கள் கூட்டம், நம் நாட்டில் முதன்முறையாக நடக்கிறது. டில்லியில் நாளை துவங்கி, 31ம் தேதி வரை நடக்கும் கூட்டத்தில் சர்வதேச நாடுகளின் விசாரணை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், ஐ.சி.ஏ.ஓ., எனப்படும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விமான விபத்து விசாரணை தொடர்பான புலனாய்வாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினராக உள்ள நாடுகளில் ஒன்றில் நடத்தப்படும் இந்த கூட்டம், முதல் முறையாக நம் நாட்டில் நடக்கிறது.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பணியகம் சார்பில், இந்த கூட்டம் நாளை முதல் 31ம் தேதி வரை டில்லியில் நடக்கிறது.
விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இந்த மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார். சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் இருந்து 90 பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். உலகம் முழுதும் உள்ள பல்வேறு சர்வதேச அமைப்புகள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் நிகழ்ந்த விமான விபத்துகள், அது தொடர்பான விசாரணைகள், விசாரணை அதிகாரிகளிடையே உள்ள ஒருங்கிணைப்பு, அனுபவம் மற்றும் தகவல்கள் இந்த கூட்டத்தின் போது விவாதிக்கப்பட உள்ளன.
மேலும் ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், விமான விபத்து விசாரணையின் போது, பிற நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளது.
கடந்த ஜூன் 12ல், குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு புறப்பட்ட விமானம், அடுத்த சில நொடிகளில் விழுந்து நொறுங்கி 260 பேர் பலியான சம்பவம் தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

