ADDED : அக் 27, 2025 08:56 AM
வெளிமாநில வாகனங்களுக்கு உத்தரகண்டில் பசுமை வரி
டேராடூன் : உத்தரகண்டில் நுழையும் வெளிமாநில வாகனங்களுக்கு டிசம்பர் முதல் பசுமை வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில கூடுதல் போக்குவரத்து கமிஷனர் சனாத் குமார் சிங் தெரிவித்தார். இதன்படி வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப 80 முதல் 700 ரூபாய் வரை பசுமை வரி வசூலிக்கப்படும். இதற்காக மாநிலத்தின் எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள 37 தானியங்கி கேமராக்கள், வாகனங்கள் குறித்த தகவலை பதிவு செய்து வரி வசூலிக்கும் நிறுவனத்தின் சாப்ட்வேருக்கு அனுப்பும். அவர்கள் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கான வரி தொகையை ஆன்லைனில் வசூலிப்பர்.
====
மழையில் 2 மாதங்களுக்கு முன் மாயமான 7 பேர் சடலமாக மீட்பு
ருத்ரபிரயாக் : உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கடந்த ஆக., 28, 29 தேதிகளில் கனமழை, மற்றும் நிலச்சரிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் செனகாட் பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உட்பட 9 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இடிபாடுகளில் இருந்த, கடந்த 24ல் இரு சடலங்கள் மீட்கப்பட்டன. நேற்று முன்தினம் மேலும் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் குப்தகாசி பகுதியைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் குல்திப் சிங் நேகி, 25, என அடையாளம் காணப்பட்டுள்ளது. மாயமான மேலும் இருவரை தொடர்ந்து தேடுகின்றனர்.

