சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு: பீஹாரில் லாலு மகன் நாடகம்
சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு: பீஹாரில் லாலு மகன் நாடகம்
ADDED : ஜூலை 27, 2025 06:50 AM

இந்தாண்டு அக்டோபர், -நவம்பர் மாதங்களில் பீஹார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, வாக்காளர் பட்டியலை திருத்த, தேர்தல் ஆணையம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
'எங்கள் கேள்விகளுக்கு ஆணையம் பதில் சொல்லவில்லை' என ராகுலும், லாலு பிரசாத் யாதவின் மகனுமா ன தேஜஸ்வியும் குற்றஞ்சாட்டினர். உடனே ஆணையம் , 'வெளிநாட்டவர், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் ஆகியோர் தான், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்' என, பதிலளித்தது.
இதையடுத்து, 'பீஹார் தேர்தலை நாங்கள் புறக்கணிப்பது குறித்து யோசிக்கிறோம்' என, கூறியுள்ளார் தேஜஸ்வி. உண்மையிலேயே எதிர்க்கட்சிகள் புறக்கணிக்குமா? அப்படியானால் தேர்தல் நடக்குமா?
அப்படி எதிர்க்கட்சிகள் புறக்கணித்தால், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின், ஜன் சுராஜ் கட்சி எதிர்க்கட்சி இடத்தை பிடித்துவிடும். மேலும், 'தேர்தல் ஆணையத்தின் வேலை, தேர்தலை நல்ல முறையில் நடுநிலையாக நடத்துவதுதான். அதற்காக, ஆணையம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம்' என, அரசியல் சாசன பிரிவு, 324 தெளிவாக கூறியுள்ளது.
ஒரு வேளை, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி, 'நாங்கள் தேர்தலை புறக்கணிப்பதால், தேர்தலை நிறுத்த வேண்டும்' என, மனு தாக்கல் செய்தால் என்னாகும்?கடந்த 1989ல் உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. மிசோரம் சட்டசபை தேர்தலை, சில கட்சிகள் புறக்கணித்தன. எனவே, 'தேர்தலை தடை செய்ய வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இதை உச்ச நீதிமன்றம் நிராகரித்து, 'வெறும் புறக்கணிப்பை காரணம் காட்டி, தேர்தலை நிறுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
'தேர்தலை புறக்கணிப்பது என்பதெல்லாம் வெறும் நாடகம்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.