நாளை முதல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர்...; எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆளுங்கட்சிக்கு அறிவுரை
நாளை முதல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர்...; எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆளுங்கட்சிக்கு அறிவுரை
ADDED : ஜூலை 14, 2024 06:53 AM

பெங்களூரு : கர்நாடகாவில் நாளை முதல் சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது. காங்கிரஸ் அரசின் தோல்விகளை குறிப்பிட்டு, போராட்டம் நடத்தி திணறடிக்க பா.ஜ., - ம.ஜ.த., திட்டமிட்டுள்ளன. இதை சமாளிக்க தயாராகும்படி, ஆளுங்கட்சியினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கர்நாடக சட்டசபையில் கடைசியாக, பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தது. ஆறு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.
அந்த வகையில், மழைக்கால கூட்டத் தொடர் நாளை காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. சட்டசபை, மேலவை இரண்டிலும், மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
செயலர் அறிக்கை
அதன் பின், தன் அறிக்கையை செயலர் தாக்கல் செய்கிறார். முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஜனாதிபதி, கவர்னர் அளித்த ஒப்புதல் குறித்து செயலர் தெரிவிப்பார்.
அதன் பின், வெவ்வேறு உறுப்பினர்களின் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து விவாதங்கள் நடக்க உள்ளன. இந்த மழைக்கால கூட்டத் தொடர், வரும் 26ம் தேதி வரை நடக்கும்.
ஆனால், காங்கிரஸ் அரசின் தோல்விகளை சுட்டி காண்பித்து, பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் கூட்டாக போராட்டம் நடத்த முடிவு செய்துஉள்ளனர்.
என்னென்ன விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்டு திணறடிக்க வேண்டும் என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி உட்பட இரண்டு கட்சித் தலைவர்களும் நேற்று முன்தினம் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
நாளை ஆலோசனை
கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பும், இரண்டு கட்சித் தலைவர்களும், நாளை மீண்டும் ஒருமுறை ஆலோசனை நடத்த உள்ளனர். எப்படி செயல்பட வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த உள்ளனர்.
குறிப்பாக, வால்மீகி மேம்பாட்டு வாரியத்தில் நடந்த முறைகேடு விஷயம்; மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் சார்பில் முதல்வர் மனைவிக்கு மனை ஒதுக்கிய விவகாரம்; எஸ்.சி., - எஸ்.டி.,யினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது; விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை வழங்காதது இப்படி பெரிய பட்டியலையே எதிர்க்கட்சியினர் தயார்படுத்திவைத்துள்ளனர்.
இதே வேளையில், எதிர்க்கட்சியினரின் திட்டத்தை முறியடித்து, சமாளிக்கும்படி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் அறிவுறுத்தி உள்ளனர்.
எதிர்க்கட்சியினர் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக, அமைச்சர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதான் சவுதா முற்றுகை
போராட்டம் காரணமாக, தங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றினாலும், விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தவும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், நாளை விதான் சவுதாவை முற்றுகையிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்துஉள்ளார்.
எனவே, இம்முறை சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வெவ்வேறு அமைப்புகள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளனர்.
இதனால் முன்னெச்சரிக்கையாக விதான் சவுதாவை சுற்றி 2 கி.மீ., சுற்றளவுக்கு நாளை முதல், வரும் 26ம் தேதி வரை, கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில், காலை 6:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.