அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு சட்டசபை சம்மன்
அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு சட்டசபை சம்மன்
ADDED : நவ 07, 2025 01:37 AM

விக்ரம்நகர்:'பான்சி கர்' எனப்படும் மரணதண்டனைக்கு பயன்படுத்தப்பட்ட அறை விவகாரம் தொடர்பாக சிறப்பு உரிமைகள் குழு முன் வரும் 13ம் தேதி நேரில் ஆஜராகும்படி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி சட்டசபை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரிட்டிஷ் காலத்தில் மரணதண்டனைக்கு பயன்படுத்தப்பட்ட 'பான்சி கர்' எனப்படும் அறையை டில்லி சட்டசபை வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு, 2022ல் அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு திறந்து வைத்தது.
இந்த விவகாரம் கடந்த மழைக்காலக்கூட்டத்தொடரில் கடும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது, முந்தைய ஆம் ஆத்மி அரசால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட 'பான்சி கர்' குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகளை சபாநாயகர் விஜயேந்தர் குப்தா மறுத்தார். மேலும் அது, டிபன் அறை என்று குறிப்பிட்டார்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தவறான தகவல் அளித்ததுடன், சபையை தவறாக வழி நடத்தியது குறித்து விசாரிக்க சிறப்பு உரிமைகள் குழு அமைக்கப்பட்டது. பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரத்யும்ன் சிங் ராஜ்புத் தலைமையிலான சிறப்புரிமைகள் குழுவில், ஆம் ஆத்மி கட்சியின் சுரேந்திர குமார், ராம் சிங் நேதாஜி ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த குழு முன் 13ம் தேதி ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும்படி, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் ஆகியோருக்கு டில்லி சட்டசபை சம்மன் அனுப்பியுள்ளது.

